டில்லி: டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்-ல் கோட் ஸ்கேன் செய்து பணம் எடுக்கும் வசதி குறித்த வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது.
பணப் பரிவர்த்தனையில் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிமிதமாக காணப்படும் இந்த நவநாகரிக யுகத்தில் பல்வேறு நவீன மாற்றங்கள் வந்துவிட்டன. வங்கிக்கு சென்று பணம் எடுத்த காலம் போய் தெருவுக்குத் தெரு ஏடிஎம் மெஷின்கள் உருவாகின. தற்போது யுபிஐ செயலிகள் மூலமாக ஸ்மார்ட்போன்கள் கொண்டு எளிதில் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும்.
ஏடிஎம்களில் வருகைக்குப் பின்னர் வங்கிகளில் பணம் எடுப்போரது கூட்டம் குறைந்தது. இதனை இன்னும் எளிதாக ஏடிஎம் கார்டு பயன்படுத்தாமல் ஏடிஎம் மெஷின்களில் உள்ள கோட்-ஐ ஸ்கேன் செய்து பணத்தை எடுக்கும் வசதி மேலைநாடுகளில் அறிமுகமாகியது. இந்த வசதி தற்போது ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் இந்தியாவிலும் அறிமுகமாகி உள்ளதை அடுத்து பணப்பரிவர்த்தனை இன்னும் சுலபமாகி உள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் பேங்க் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில் முதற்கட்டமாக சில வங்கிகளுக்கு மட்டுமே கார்ட் இல்லாமல் பணத்தை ஏடிஎம் மெஷின்களிலிருந்து எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இது வெற்றி பெற்றால் அடுத்தடுத்து அனைத்து வங்கி ஏடிஎம்-களிலும் யுபிஐ மூலமாக பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் போன்களில் இதற்காக பிரத்யேகமாக செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலிக்குள் சென்று ஏடிஎம் மெஷினில் உள்ள கோட்-ஐ ஸ்கேன் செய்து எடுக்க வேண்டிய பணம் குறித்த தகவல்களை அளித்தால் டெபிட் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கலாம். இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு இருப்பதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பெருநகரங்களில் மட்டுமே தற்போது இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்த முறை குக்கிராமங்கள்வரை கொண்டு சேர்க்கப்படும் என கூறப்படுகிறது. பணத்தை எடுக்காமலேயே வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்ததாக ஸ்மார்ட் போனுக்கு எஸ்எம்எஸ் வந்தால் உடனடியாக வங்கியிடம் புகார் அளிக்க வேண்டும், உடனே பணம் மீண்டும் கணக்கில் சேர்க்கப்படும் என ஆர்பிஐ தகவல் அளித்துள்ளது.
Advertisement