பெங்களூரு:
பெங்களூரு தேவனஹள்ளி அருகே கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து டெல்லி, சென்னை, தூத்துக்குடி, ஐதராபாத், உப்பள்ளி, பெலகாவி உள்ளிட்ட பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமான நிலைய போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அதிகாலை 3.30 மணி அளவில் போன் வந்தது. போனில் பேசியவர் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். அவரது பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் விமான நிலையத்துக்கு விரைந்து வந்து சோதனையிட்டனர். மோப்ப நாய்கள் கொண்டு விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே, இது போலியான மிரட்டல் என தெரியவந்தது. இதனால் போலீசார் மற்றும் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
அதேசமயம் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, சுபாஷிஷ் குப்தா என்ற நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தன் தங்கையின் கணவரை பழிவாங்குவதற்காக, வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது.
சுபாஷிஷ் குப்தாவின் தங்கையை அவரது கணவர் விவாகாரத்து செய்ய உள்ளதாக கூறியிருக்கிறா. இதனால் அவர் மீது கடும் ஆத்திரமடைந்துள்ளார் சுபாஷிஷ் குப்தா. இதனால் அவரை சிக்கலில் மாட்டிவிடுவதற்காக அவர் பெயரைச் சொல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட சுபாஷிஷ் குப்தாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.