கொழும்பு: கடன் செலுத்தும் காலத்தை அதிகரித்து, தொகையை குறைத்து மறுசீரமைப்பு செய்யப்படும் வரை வாங்கிய கடனை இலங்கையால் திருப்பிச் செலுத்த முடியாது, இதனை கடன் வாங்கியவர்களிடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம் என அந்நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.
இதனால் எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு என பெரும் பொருளாதார நெருக்கடியில் அந்நாடு சிக்கியுள்ளது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அந்நியச் செலவாணி கையிருப்பு இல்லாததால் அன்றாடம் பொருட்களை வாங்க கடன் வாங்கும் நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையையும் செலுத்த முடியாத திவால் ஆகும் நிலைக்கு ஆளாகியுள்ளது.
இலங்கையை பொறுத்தவரையில் ஆண்டுதோறும் வெளிநாட்டுக்கடன் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதுமட்டுமின்றி நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது 3 பில்லியன் டாலராக உள்ளது. இதில் ஜூலையில் முதிர்ச்சியடையும் 1 பில்லியன் டாலர் சர்வதேச தங்கப்பத்திர கடன் உள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியில் 14.3 சதவீத பங்குடன் அதிக கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.
சீனாவிடம் அதிகமாக கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. ஒருபுறம் கடும் கடன் கழுத்தை நெறித்தாலும் அன்றாட செலவுகளுக்கும், பெட்ரால், டீசல் உட்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் இந்தியாவிடம் கடன் வாங்கியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கைக்கு ஜனவரி முதல் 400 மில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்றம் மற்றும் 500 மில்லியன் அமெரிக்க டாலரில் கடன் வழங்கியுள்ளது.
இதுமட்டுமின்றி 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் உதவி வழங்கவும் உறுதியளித்தள்ளது. கடந்த மாதம், உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்க இந்தியாவுடன் 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனாக பெற இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது.
ஒப்பந்தப்படி ஜூலை மாதத்துக்குள் இலங்கை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை பெரிய அளவில் உள்ளது. இந்த தொகை இலங்கையின் கழுத்தை நெறிக்கும் அளவுக்கு உயர்ந்து விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஏற்கெனவே கவலை தெரிவித்து இருந்தது. குறிப்பாக சீனாவிடம் பெற்ற கடனுக்கான வட்டியுடன் ஜூலையில் ஒரு பகுதியை செலுத்த வேண்டிய நிலையில் சீனா கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளது.
திவால் நிலை
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறியதாவது:
இலங்கையில் இந்தாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது மிகவும் மந்தகரமான நிலையிலேயே காணப்படும். தற்போது 30 சதவீதமாகக் காணப்படுகின்ற பணவீக்கம் எதிர்வரும் சில மாதங்களில் 40 சதவீதமாக அதிகரிக்கும். எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. கடனை மறுசீரமைக்கும் வரை இலங்கை வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாது. இதனை கடன் வாங்கியவர்களிடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். எனவே அதற்கு முன்கூட்டியே திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது.
இது 1948 இல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டின் முதல் முறையாக கொடுத்த தவணை மாறி கடனை திருப்பிச் செலுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு இது மிகவும் துன்பகரமான நேரமாகும். உலகிலேயே மிக மோசமான கடன் பத்திரங்கள் இலங்கையினுடையது என ரேட்டிங் நிறுவனங்கள் கூறுகின்றன.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம். கடனளித்தவர்களிடம் கடன் மறுசீரமைப்பு செய்யுமாறு பேசி வருகிறோம். நெருக்கடியில் இருந்து வெளியேற இந்த ஆண்டு 3 பில்லியன் முதல் 4 பில்லியன் டாலர்கள் வரை தேவை.
அரசியல் சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது எனது பணியை தொடர்வதற்கு ஆறுதல் அளிக்கிறது. அரசியல் ஸ்திரத்தன்மை திரும்பவில்லை என்றால் நான் பணி செய்வதில் எந்த அர்த்தமும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை ஒட்டுமொத்தமாக வெளிநாடுகள், வங்கிகள், சர்வதேச நிதியம் உள்ளிட்டவற்றில் மொத்தமாக உள்ள 51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனை தற்போதைய நிலையில் திருப்பிச் செலுத்துவதை நிறுத்தி வைப்பதாக ஏற்கெனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் இருந்து இலங்கை அரிசி, பெட்ரோல் டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்கியதற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ஜனவரி மாதத்திலிருந்து அதிகரித்து வருகிறது. இதுவரை எந்த பணத்தையும் திருப்பிச் செலுத்தாத நிலையில் பொருட்கள் வாங்கிய வகையில் மட்டும் செலுத்த வேண்டிய தொகை 12.6 பில்லியன் டாலராக உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.