நியூயார்க் : ஐ.நா., கூட்டத்தில் சம்பந்தமின்றி காஷ்மீர் பற்றி பாக்., பேசியதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம், அமெரிக்கா தலைமையில் நேற்று நடந்தது.
இதில், பாக்., வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரி, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம், தொகுதி மறுவரையறை பணிகள் குறித்து பேசினார். இதை கண்டித்து இந்தியாவிற்கான ஐ.நா., கவுன்சிலர் ராஜேஷ் பரிஹர் பேசியதாவது:ஜம்மு – காஷ்மீர், லடாக் ஆகியவை இந்தியாவுடன் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத யூனியன் பிரதேசங்கள் ஆகும். இதில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரும் அடங்கும். எந்த நாடும் இதை மறுக்க முடியாது.
சர்வதேச அமைதி தொடர்பான ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தான் வழக்கம் போல, தேவையற்ற வகையில் காஷ்மீர் குறித்த பொய்களை கக்கியுள்ளது. இந்தியா மீது களங்கம் கற்பிக்கும் வகையில், காஷ்மீர் பற்றி தொடர்ந்து ஐ.நா., கூட்டங்களில் பேசுவதை பாக்., நிறுத்த வேண்டும்.
பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவிப்பதையும் அந்நாடு நிறுத்த வேண்டும். உண்மை நிலையை ஏற்று, இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை கைவிட வேண்டும். பயங்கரவாத, வன்முறை, விரோத போக்கற்ற பாக்., உடன் நட்பு பாராட்டவே இந்தியா விரும்புகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement