தொல்லியல் துறைக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு: தமிழக அமைச்சரிடம் ஒன்றிய அமைச்சர் உறுதி

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் நடைபெற்ற தெற்காசிய சுற்றுலா மற்றும் பயணங்கள் கண்காட்சியில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். பின்னர், ஒன்றிய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து, தமிழகத்தின் சுற்றுலா சார்ந்த திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை வழங்கினார்.   பின்னர், அமைச்சர் மதிவேந்தன் அளித்த பேட்டி வருமாறு: ராமேஸ்வரத்தில் ‘‘பிரசாத்” திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ரூ.49.70 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்ட திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இதே பிரசாத் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை, திருத்தணி ஆகிய இடங்களை மேம்படுத்த வேண்டும். பிரசாத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.49.70 கோடியில் ஐந்தாக பிரிக்கப்பட்டு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள உள்ளோம். அதில், அக்னி தீர்த்தம் (படித்துறை),  ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பார்க்கிங் வசதிகள், நடைபாதை, ராமேஸ்வரம் நகரில் ஒளிவூட்டம், படகு தளம் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.  மேலும், ‘‘சுவதேஷ் தர்சன்” திட்டத்தை ஒன்றிய அரசு மீண்டும் செயல்படுத்த உள்ளது. அதற்கு தமிழகத்தில் இருந்தும் சில இடங்களை தேர்வு செய்து அனுப்ப உள்ளோம். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களில் ஒளிஒலி அமைக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில், தொல்லியல் துறை அனுமதி வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை வீடியோ பதிவு செய்ய வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு  விலக்கு அளிக்கப்படும் என்று  அமைச்சர் தெரிவித்தார். மீதமுள்ள அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக பரிசீலிக்கப்படும் என உறுதியளித்தார். தமிழகத்தை பொருத்தமட்டில் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பிரதேச சுற்றுலா தலங்களில் மல்டி லெவல் பார்க்கிங் எதிர்காலத்தில் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.