நிலையியற் கட்டளைகளைத் திருத்தம் செய்வதன் மூலம் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) உள்ளிட்ட சகல பாராளுமன்றக் குழுக்களின் அதிகாரங்களையும் பலப்படுத்துவதற்கான பிரேரணை இன்று அல்லது அடுத்தவாரம் முன்வைக்கப்படும் என சபை முதல்வரும், அமைச்சருமான கௌரவ தினேஷ் குணவர்தன இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் சபை முதல்வர் அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன சபையில் தெரிவித்ததாவது,
“அரசாங்கம் என்ற ரீதியில் இன்றையதினம் அல்லது அடுத்த வாரத்தில் நிலையியற் கட்டளைகளைத் திருத்துவதற்கான வரைபை பாராளுமன்றத்தில் கையளிப்போம். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மற்றும் ஏனைய குழுக்களுக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் இது அமையும்.
குழுக்களின் தலைவர்கள் தற்பொழுது பாரிய சேவையைாற்றி குழுக்கள் பற்றிய அறிக்கைகளைச் சபையில் முன்வைக்கின்றனர். இதற்கும் அப்பால் இவற்றைக் கொண்டு செல்வதற்குத் தேவையான அதிகாரங்கள் போதுமானதாக இல்லை. இவ்வாறான நிலையில் குறித்த குழுக்களுக்குப் போதிய அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு சபை முதல்வர் என்ற ரீதியில் கலந்துரையாடல்களை நடத்தி இது தொடர்பான வரைபை உங்களிடம் கையளிக்கவுள்ளோம். இதன் ஊடாக திறம்பட செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்” என்றார்.