நீலகிரி: உதகை மலர் கண்காட்சியை திறந்துவைத்த முதல்வரை வரவேற்ற ராணுவ பேண்ட் வாத்திய இசைக்குழுவினர் முதல்வரை வாழ்த்தி ”நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற” என்ற எம்ஜிஆரின் இதயக்கனி திரைப்படப் பாடலை இசைத்து டைமிங் இசை வழங்கியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
வெலிங்டன் ராணுவத்தின் பேண்ட் வாத்தியக் குழு முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்களை நோக்கி வந்ததும், ”நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற” பாடலை டைமிங்காக வாசிக்க முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி அதனை வெகுவாக ரசித்தனர். நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அவருடன் அவரது மனைவி துர்காவும் உடனிருந்தார்.
மலர்கள் மற்றும் சிறப்பு அலங்காரங்களைப் பார்வையிட்ட அவர், தோடர், கோத்தர் மற்றும் ஓடிசி கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்களுடன் அமர்ந்து கண்டு ரசித்தார். பின்னர் பூங்காவின் பிரசித்தி பெற்ற இத்தாலியன் பூங்காவுக்கு அவரும், அவரது மனைவி துர்காவும் சென்றனர். அங்கு உள்ள பிரசித்தி பெற்ற பேண்ட் ஸ்டாண்டில், வெலிங்டன் ராணுவத்தின் பேண்ட் இசைக்குழு பிரத்யேகமாக இசையை இசைத்தனர். அவர்களின் பேண்ட் வாத்திய இசையை அங்குள்ள காட்சி கோபுரத்தில் முதல்வர் கண்டு ரசித்தார்.
பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், கீழே இறங்கி பேண்ட் வாத்தியக் குழுவினர் அருகில் வந்ததும், பேண்ட் வாத்திய குழுவினர், ”நீங்கள் நல்ல இருக்கணும் நாடு முன்னேற” பாடலை டைமிங்கில் இசைக்க புன்னகை பூத்தார். அவரது மனைவி துர்கா அதை வெகுவாக ரசித்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்ட முதல்வரை நோக்கி சுற்றுலாப் பயணிகள் ஆரவாரம் செய்ய, அவர்களை நோக்கி கை அசைத்தும், வணக்கம் தெரிவித்தார். மேலும், அங்கிருந்த சிலரிடம் மனுக்களை பெற்றதோடு, கை குலுக்கினார். முதல்வருடன் நீலகிரி எம்.பி. ஆ.ராசா மற்றும் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் உடனிருந்தனர்.