ஹட்டன் நகரிலுள்ள சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்கள் முன்பாக பல நாட்களாக நீண்ட வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள வெற்று எரிவாயு கொள்கலன்களால் பாதசாரிகள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
ஹட்டன் நகரில் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில், ஹட்டன் நகரிலுள்ள ஹோட்டல்களின் உரிமையாளர்கள், சமையல் எரிவாயு கொள்கலன்களை நடைபாதையில் நீண்ட தூரத்துக்கு வைத்து, ஒன்றுடன் ஒன்றை கயிற்றால் பிணைத்து கட்டி வைத்துள்ளனர்.
இதனால் நடைபாதையில் பயணிப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹட்டன் நகரிலுள்ள சகல எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்பாகவும் ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தரகர்களை பயன்படுத்தி, சமையல் எரிவாயுவை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் சாதாரண மக்கள் சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.