நெஞ்சுக்கு நீதி பாக்ஸ் ஆபீஸ் பட்டையை கிளப்புமா? ப்ரொமோ- வில் இறங்கிய அமைச்சர்கள்- மா.செ- க்கள்

கடந்த 2019-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் ஆர்டிக்கள் 15. ஜாதிய வன்கொடுமையை தோலுரித்து காட்டும வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யப்போவதாக அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியானது. உதயநிதியின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக கருதப்படும் இந்த நெஞ்சுக்கு நீதி படத்திற்காக திமுக அமைச்சர்கள் பலரும் பரமோஷன் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் எம்எல்ஏவாக உள்ள உதயநிதி நடிப்பில் தேர்தல் வெற்றிக்கு பிறகு வெளியாகும் முதல் படம் இதுவாகும். மேலும் திமுகவில் தற்போது உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அவர் விரைவில் அமைச்சர் பதவி ஏற்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக கட்சியில் உதயநிதியின் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், உதயநிதி விரைவில் தனது திரைப்பயணத்தை முடித்துக்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது . இதனால் நெஞ்சுக்கு நீதி படத்தை பெரிய வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் என்று திமுகவினர் ப்ரமோஷன் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக தமிழகத்தின் பல இடங்களில் திமுகவினர் தியேட்டரின் முழு டிக்கெட்டையும் வாங்கி மக்களுக்கு இலவசமாக வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நெஞ்சுக்கு நீதி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பலரும் ஈடுட்டு வருகின்றனர். இது தொடர்பாக வீடியோ மற்றும் ட்விட்டர் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறந்த கதை இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ள இந்த படம் கண்டிப்பாக ஹிட்டாகும் என்றாலும் கூட எங்கள் தரப்பில் இருந்து பரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று திமுகவினர் தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் பல பகுதியில் உதயநிதியின் படம் அச்சிடப்பட்ட டீ-சார்ட் அணிந்து ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டரை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.

பொதுவாக உதயநிதி படம் வெளியாகும்போது அதை திமுகவினர் பெரிதாக கொண்டாடுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் கூட இந்த நெஞ்சுக்கு நீதி படத்திற்காக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட திமுகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் களத்தில் குத்தித்துள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் திமுகவில் அடுத்து உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்து அமைச்சர் பதவியில் அமர உள்ள உதயநிதி ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவருக்கே உட்கட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும். இதற்காக உதயநிதியிடம் நல்லபெயர் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தலைமை உத்தரவு இல்லை என்றாலும் திமுக நிர்வாகிகள் நெஞ்சுக்கு நீதி படத்தின் ப்ரமோஷனில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.