`நெருங்கிய உறவுக்காரரை திருமணம் செய்யும் வழக்கம் தமிழத்தில்தான் அதிகம்’ – ஆய்வில் தகவல்

இந்தியாவை பொறுத்தவரை உறவுமுறைக்குள் வருவோரை, நெருங்கிய உறவுக்காரரையே திருமணம் செய்துகொள்ளும் நடைமுறை இன்றளவும் பரவலாக இருந்து வருகின்றது. இருப்பினும் நாளடைவில் இது குறைவதையும் ஆங்காங்கே காண முடிகிறது. இந்நிலையில் இன்றைய தேதியில் `நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வோர்’ வழக்கம் எத்தனை சதவிகிதம் உள்ளது என்பது அறிய, தேசிய குடும்ப நல ஆய்வகம் ஆய்வொன்றை முன்னெடுத்துள்ளது. அந்த ஆய்வின் முடிவில், இந்தியாவில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில்தான் நெருங்கிய உறவுக்காரரை திருமணம் செய்யும் பெண்கள் சதவிகிதம் அதிகம் உள்ளது.
image
திருமணம் செய்யும் பெண்கள் சதவிகிதத்தை பொறுத்தவரை, 
தேசிய அளவில் – 11%
தமிழ்நாடு – 27.9%
கர்நாடகா – 26.6%
ஆந்திரா -26.4%
புதுச்சேரி – 19.2%
தெலங்கானா – 18.2%
பேர் நெருங்கிய உறவுக்காரரையே திருமணம் செய்கின்றனர்.
image
இப்படியாக நெருங்கிய உறவினரை திருமணம் செய்யும் பெண்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முன்னிலையில் முதல் நிலையில் உள்ளது. இந்த நெருங்கிய உறவினர் என்பவர் மாமா முறை, மைத்துனர் என ஏதாவதொரு ரத்த சம்பந்த உறவாக இருப்பார். தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகாவில் இது அதிகம் உள்ளது. இந்த ஆய்வு மிக சமீபத்தில் 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் செய்யப்பட்டதாகும். ஆய்வின்படி, இன்றைய இளம் பெண்கள் பலரும் தங்கள் கணவருக்கு ஏதோவொரு வகையில் உறவுக்காரராக இருக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் கிராமத்தில் வசிப்போர், நகரத்தில் வசிப்போர் என எந்த வித்தியாசமும் இல்லாமல், எல்லா பெண்களுமே இப்படியான வரைமுறைக்குள் சிக்கிக்கொள்கின்றனர் என்பது ஆய்வு சொல்லும் உண்மையாக இருகிறது. மதரீதியாக பார்க்கையில், முஸ்லிம் மற்றும் புத்த மதம் / நியோ-புத்த மதத்தை சேர்ந்தோர் உறவுக்குள் திருமணம் செய்யும் பழக்கத்தில் அதிகமிருப்பது ஆய்வில் தெரிகிறது.
image
தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக கர்நாடகாவை பொறுத்தவரை 15 – 49 வயதுக்குட்பட்ட பெண்களில், தங்கள் தாய் வழியில் வரும் `திருமண முறை’ வரும் முதல் நபரையே திருமணம் செய்வோரின் எண்ணிக்கை 13.9% என்றும், தந்தை வழியில் வரும் உறவுக்காரரை திருமணம் செய்வோர் எண்ணிக்கை 9.6% என்றும் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதேபோல திருமண உறவுமுறை வரும் இரண்டாவது தர உறவுக்காரரை திருமணம் செய்வோரின் எண்ணிக்கை தாய் வழியில் 0.5% என்றும், 0.2% என்றும் உள்ளதாக ஆய்வில் கூறப்படுகிறது. இதேபோல இந்திய அளவில் 2.5%-க்கும் மேலான இணக்கமான திருமணங்கள் வெவ்வேறு உறவு முறைகொண்ட, ஆனால் ரத்த சம்பந்தம் இருக்கும் நபர்களுக்குள்தான் நடக்கிறது. 0.1% பெண்கள், தங்கள் அக்கா வழியில் வரும் கணவரின் தம்பி முறை உடையோரை திருமணம் செய்திருக்கிறார்கள்.
ஆய்வு சொல்லும் பிற தகவல்!
தாய்வழி உறவுக்காரரை திருமணம் செய்வோர் விகிதம்
தேசிய அளவில் – 4%
கர்நாடகா 13.9%
ஆந்திரா – 11.6%
தமிழ்நாடு – 11.2%
புதுச்சேரி – 7.6%
தெலங்கானா – 5.3%
image
தந்தைவழி உறவுக்காரரை திருமணம் செய்வோர் விகிதம்
தேசிய அளவில் – 4%
ஆந்திரா – 10.5%
தமிழ்நாடு – 10%
தெலங்கானா – 9.9%
கர்நாடகா – 9.6%
புதுச்சேரி – 7.6%
என்றுள்ளது.
இதையும் படிங்க… ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்… ‘நெஞ்சுக்கு நீதி’ விமர்சனம்..!
இந்த ஆய்வு முடிவை தொடர்ந்து `இப்படி நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வோருக்கு பிறக்கும் குழந்தகளுக்கு மரபு சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் அதுகுறித்து அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’ என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இப்படி திருமணம் செய்துக்கொள்வோர், தங்களுக்கு தாலிசீமியா, சிக்கிள் செல் நோய் பாதிப்பு, நோயெதிர்ப்பு குறைபாடுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை முன்கூட்டியே பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்றும், அப்படி இருந்தால் உறவுக்குள் திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மீறி திருமணம் செய்துகொள்ளும்பட்சத்தில், அந்த பெற்றோர் தங்களின் கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு அது சார்ந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
image
இதை அவர்கள் சொல்ல காரணம், `இந்தியா போன்றதொரு வேற்றுமைகள் கொண்ட, அதே நேரம் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டில் நெருங்கிய உறவினரை திருமணம் செய்வதென்பது தொன்றுதொட்டு வரும் விஷயமாக, பாரம்பரியமிக்க ஒரு விஷயமாகவே இன்றளவும் பார்க்கப்படுகிறது. அதை சில தினங்களில் நிறுத்த நினைப்பதென்பது நடைமுறையில் சாத்தியப்படாது. ஆகவே, என்ன மாதிரியான பின்விளைவுகள் என்பதை அறிந்து செயல்படும் விழிப்பு உணர்வை அவர்களுக்கு அளிப்பதே, இப்போதைய உடனடி தேவை’ என்பதுதான்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.