புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில முன்னாள் தலைவர் சுனில் ஜாகர், ஜே.பி.நட்டா தலைமையில் நேற்று பாஜ.வில் இணைந்தார். கடந்த ஆண்டு பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் பதவி விலகிய போது, அடுத்த முதல்வருக்கான பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சுனில் ஜாகர் பெயரும் இடம் பெற்றது. ஆனால், அந்த வாய்ப்பு பறிபோனதால், கட்சிக்கு எதிரான கருத்துகளை அவர் கூறி வந்தார். இந்நிலையில், பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை கடுமையாக விமர்சித்ததால், 2 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து ஜாகர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த அவர், ‘காங்கிரசுக்கு குட் பாய்,’ என சமூக வலைதளத்தில் கடந்த வாரம் விடியோ மூலம் தெரிவித்தார். இந்நிலையில், டெல்லியில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் ஜாகர் நேற்று அக்கட்சியில் இணைந்தார். அப்போது பேசிய நட்டா, ‘அரசியல் வாழ்க்கையில் தனக்கென தனி பெயரை பெற்ற சுனில் ஜாகரை கட்சிக்கு வரவேற்கிறேன். இவர் பஞ்சாப்பில் பாஜ.வை பெரியளவில் வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவார் என நம்புகிறேன்,’ என தெரிவித்தார்.