பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி ரூ.85-க்கு விற்பனை; தேவையெனில் ரேஷன் கடைகளில் விநியோகிக்க திட்டம்

சென்னை: பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி கிலோவுக்கு ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெய்வது வரும் மழை காரணமாக தக்காளி விலை உயர்ந்துகொண்ட உள்ளது. தற்போது தக்காளி கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பருவமழை காரணமாக தக்காளியின் விலை வெளிச்சந்தையில் உயர்ந்துள்ளதை கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலவு விலையில் தரமான தக்காளி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசு கூட்டுறவுத் துறையின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

2021 வடகிழக்கு பருவமழை காலத்தில், கூட்டுறவுத் துறை நடத்திவரும் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 27.11.2021 முதல் 30.12.2021 வரை 150 மெட்ரிக்டன் அளவிற்கு தக்காளியும் இதர காய்கறிகள் 1100 மெட்ரிக்டன் அளவிற்கும் ரூ.4 கோடி மதிப்பிற்கு கொள்முதல் செய்யப்பட்டு தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.45 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்பட்டது.

தற்பொழுது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருவதால் தக்காளியின் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. தக்காளி ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை வெளிசந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத் துறை நடத்தி வரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் முதற்கட்டமாக இன்று 4 மெட்ரிக் டன் அளவிற்கு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்டுகிறது.

இதனைத் தொடர்ந்து தக்காளியின் வெளிச்சந்தை விலை கட்டுப்படுத்தப்படும் வரை இந்நடவடிக்கை நாளை முதல் அனைத்து மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத் துறை நடத்தி வரும் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மேற்கொள்ளப்படும். மேலும், தேவையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.