மாணவர்களிடம் கூடுதல் கட்டணம், நன்கொடை வசூலிக்க வேண்டாம் என தனியார் பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மாணவிகளின் பாதுகாப்புக்காக பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி விரைவில் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாநகராட்சி அரண்மனை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட பள்ளி வளர்ச்சியிலிருந்து ரூ.3.40 லட்சம் செலவில் 40 அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு புல் வெட்டும் இயந்திரங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அவர் கூறியதாவது:
தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகிறது. மாணவர்களிடம் கூடுதல் கட்டணம், நன்கொடை வசூலிக்க வேண்டாம் என அவர்களிடம் உத்தரவாக அல்லாமல் வேண்டுகோளாக வைக்கிறோம். தனியார் பள்ளி கல்வி கட்டணம் முறைப்படுத்தபடும். துனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் அதுகுறித்து பெற்றோர்கள் தைரியமாக புகார் கொடுக்க வேண்டும். நிச்சயம் அப்பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஐந்து வருட காலத்திற்குள் தனியார் பள்ளிகளில் உள்ள அனைத்து வசதிகளையும் அரசு பள்ளிகளில் செய்து விடுவோம். அதன்பிறகு அனைவரும் அரசு பள்ளிகளில் சேர்வார்கள். இதற்கிடையே தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட வேண்டாம். உங்களுடைய பணி சமுதாயத்திற்கு மிகவும் வேண்டப்பட்ட பணியாக நாங்கள் கருதுகிறோம். அரசு பள்ளிகளில் மட்டும் கவனம் செலுத்தி தனியார் பள்ளிகளை விட்டுவிட மாட்டோம்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க நடப்பாண்டில் 1.27 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 6 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளைத் தேடி வந்துள்ளனர். சட்டமன்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கல்வித்துறைக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடமும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் திட்டம் உள்ளது. முதல் கட்டமாக பெண்கள் பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியைத் தொடங்குவதற்கு ஆலோசித்து வருகிறோம். நிதி நிலைமைக்கு ஏற்றவாறு இது அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“