புதுடெல்லி: பெண்ணின் திருமண வயதை உயர்த்துவதற்கு மாற்றாக கல்வியின் தரத்தை மேம்படுத்தலாம் என நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் குழந்தை நல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது. ஜெயா ஜேட்லி தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏற்று, மத்திய அமைச்சரவை இந்த ஒப்புதலை அளித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, குழந்தைகள் இறப்பு விகிதம், பிரசவ இறப்பு விகிதம், தாய்-சேய் உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே குறைந்தபட்சத் திருமண வயதை மாற்றியமைப்பது குறித்த பரிந்துரையை வழங்கியுள்ளது.
இப்பரிந்துரையானது, பெண்கள் அதிகாரம் பெறுவதையும் பாலினச் சமத்துவத்தை எட்டுவதையுமே நோக்கங்களாகக் கொண்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. திருமண வயதை நீட்டிக்கும் அதே நேரத்தில், அதுவரையில் பெண் கல்விக்கான வாய்ப்புகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் ஜெயா ஜேட்லி குழு வலியுறுத்தியது.
பெண்ணின் திருமண வயது குறித்த இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம், பார்ஸி திருமணம் விவகாரத்துச் சட்டம், முஸ்லிம் தனிநபர் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டம், வெளிநாடு திருமணச் சட்டம் போன்றவற்றிலும் திருத்தம் கொண்டுவரப்படும்.
இந்தச் சூழலில் பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத்திற்கு தொடக்கத்திலிருந்தே குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள், எதிர்க்கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை சந்தித்து இவ்விவகாரம் தொடர்பாக ஒட்டுமொத்த புரிதலைப் பெற தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக அமைதிக்கான நோபல் பரிசு கைலாஷ் சத்யார்த்தி தலைமையிலான குழந்தை உரிமை அமைப்பு மற்றும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு கடந்த திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ஒப்படைந்துள்ளது. இந்த அறிக்கை அடுத்த மாதம் வெளியிடப்படும்.
நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அறிக்கையில், “குழந்தை திருமண சட்டம் – 2005, குழந்தைத் திருமணங்களை தடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டது என்பது தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் தரவுகள் மூலம் தெளிவாக தெரிய வருகிறது. இவற்றை எல்லாம் தவிர்க்க கல்வியின் தரத்தை நாம் அதிகரிக்க வேண்டும். பள்ளி இடை நிற்றல் எண்ணிக்கையை தீவிரமாக கண்காணித்து பெண்களுக்கு 18 வயது வரை இலவசக் கல்வியை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்கும்போது இளம் வயதினர் திருமணம் செய்துகொள்ளும் எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பாக பெற்றோருக்கு எதிராக திருமணம் செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால், அவர்கள் குற்றவாளிகளாக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆண்கள், பெண்கள் திருமண வயதை 18 ஆக நிர்ணயம் செய்யும்படி ஐந்து பெண்கள் நல அமைப்புகளும் நாடாளுமன்ற நிலை குழுவுக்கு அறிக்கை அனுப்பியுள்ளன.
முன்னதாக, நாட்டின் பொதுத் தேர்தல்களில் ஓட்டளிக்க 18 வயது போதும் என்றால் திருமணம் ஏன் கூடாது என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த நிலையில் குழந்தை நல அமைப்புகள் பெண்ணின் திருமண வயதை உயர்த்தும் புதிய சட்டத்திற்கு எதிராக இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளன்.