பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால் உடனடியாக திருமணம் செய்து வைப்போம் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார்.
விடுதலைக்குப் பின்னர் பல்வேறு முக்கிய பிரமுகர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வரும் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் சேலத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தனர். பின்னர் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், பேரறிவாளன் விடுதலைக்காக பலரும் குரல் கொடுத்தனர் அந்த அடிப்படையில் அனைவரையும் சந்தித்து வருகின்றோம்.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு ஒரு சிலர் காரணம் என குறிப்பிட முடியாது. பேரறிவாளனுக்கு திருமணம் செய்வதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவருக்கு பிடித்தது போல் பெண் கிடைத்து விட்டால் உடனடியாக திருமணம் செய்து வைப்போம் என்றும் அற்புதம்மாள் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், சிறையிலிருந்த துன்பங்களை ஒரு செய்தியாளர் சந்திப்பில் சொல்லிவிட முடியாது என்றும் எந்தவித குற்றமும் செய்யாமல் இத்தனை ஆண்டுகள் தண்டனை அனுபவித்தேன்; அதிலும் கடைசி 8 ஆண்டுகள் மிகுந்த மன வேதனைக்குள்ளானேன் என்றும் தெரிவித்தார்
சிறையில் இருந்த காலத்தில் சக சிறைவாசிகளுக்கு பாடம் எடுத்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன் என்றும் அவர் தெரிவித்தார். மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றும் தீர்மானத்திற்கு முழு அதிகாரம் உள்ளதை உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் மற்ற 6 பேரும் வெளியே வர வாய்ப்புள்ளது என்று பேரறிவாளன் நம்பிக்கை தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM