கடலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறப்போராட்டம் நடந்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைபெற்ற போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை குற்றவாளி இல்லை எனச் சொல்லி விடுதலை செய்யவில்லை. ஆளுநர் காலம் தாழ்த்தியதால்தான் உச்ச நீதிமன்றம் விடுவித்திருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. ஒரு சமூக ஒழுங்கு, கட்டுப்பாடு என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
ராஜீவ் காந்தியோடு சேர்த்து 9 போலீஸார் உள்ளிட்ட 17 பேர் கொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. தலைவர் ராஜீவ் காந்திக்கும் குடும்பம் இருக்கிறது. பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் மனநிலையை நான் நன்கு அறிவேன். அதுபோல அனைவருக்கும் தாய், மனைவி, குழந்தைகள் உள்ளனர். அவர்கள் மனநிலையையும் நாம் பார்க்க வேண்டும்.
பேரறிவாளன் மிக முக்கிய குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களை அவ்வழக்கின் விசாரணை அதிகாரி தெரிவித்திருக்கிறார். தமிழக சிறைகளில், இந்த வழக்கைப் போல பல்வேறு வழக்குகளில் கைதாகி 600 முதல் 700 பேர் வரை உள்ளனர். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஏன் யாரும் கூறவில்லை. கொள்கை வேறு; கூட்டணி வேறு. ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள கொள்கையில் யாரும் தலையிட முடியாது என்றார்.
தமிழகம் முழுவதும் 700-க்கும் அதிகமான இடங்களில் இந்த அறப்போராட்டம் நடந்தது.
சென்னையில் சத்யமூர்த்தி பவன் முன்பு நடந்த அறப்போராட் டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர் பொன்.கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் சென்னை சத்யமூர்த்தி பவன் அருகில் மகளிர் காங்கிரஸ் சார்பிலும் போராட்டம் நடை பெற்றது. இதுதவிர சென்னையில் ஈ.வி.கே.சம்பத் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை உள்ளிட்ட ராஜீவ் காந்தி சிலை நிறுவப்பட்டுள்ள பகுதிகளில் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.
ராஜீவ் நினைவிடம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவகம் முன்பு நடந்த அறப்போராட்டத்தில் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல் செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் போராட்டம் நடந்தது.
கோவையில் மாநில செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். மதுரையில் 2 இடங்களிலும் காரைக்குடியில் எம்எல்ஏ மாங்குடி தலைமையிலும், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், ராஜபாளையம் ஆகிய இடங்களில் மாவட்ட நிர்வாகிகள் தலைமையிலும் போராட்டம் நடந்தது. கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியிலும் காங்கிரஸார் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சேலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு தலைமையிலும், ஈரோட்டில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் தலைமையிலும் வாயில் வெள்ளைத் துணி கட்டி அறப்போராட்டம் நடந்தது. அப்போது பேசிய லெனின் பிரசாத், “குற்றவாளியான பேரறிவாளன் விடுதலையை, ஏதோ தியாகியின் விடுதலை போல சிலர் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது” என்றார்.
இதேபோல் வேலூர், குடியாத்தம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் போராட்டம் நடந்தது. இதில் ஆரணி எம்.பி. விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருச்சியில் எம்.பி. சு.திருநாவுக்கரசர், மயிலாடுதுறையில் எம்எல்ஏ ராஜகுமார் தலைமையில் போராட்டம் நடந்தது.
தூத்துக்குடி, திருநெல்வேலியிலும் போராட்டம் நடந்தது. பாளையங்கோட்டையில் ரூபி மனோகரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜினாமா
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிற்றரசு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர், தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், ‘ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றவாளியையும், அவரது விடுதலையையும் கொண்டாடும் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடர்வதை என் மனம் ஏற்கவில்லை. எனவே, மாவட்டத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.