2021-2022 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.30,307 கோடி உபரி மற்றும் ஈவுத்தொகை வழங்க, மே 20, வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில், ரிசர்வ வங்கியின் 596வது மத்திய இயக்குநர்கள் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தற்போதைய பொருளாதார நிலைமை, உலகளாவிய மற்றும் உள்நாட்டு சவால்கள் மற்றும் சமீபத்திய புவிசார் அரசியல் முன்னேற்றங்களின் தாக்கம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
ஒப்புதல்
ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான காலத்தில் ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன் இறுதியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை மற்றும் கணக்குகளுக்கு ஒப்புதல் அளித்தது.
உபரி
அதன்படி, 2021-2022 கணக்கியல் ஆண்டிற்கான உபரியாக ரூ.30,307 கோடியை மத்திய அரசுக்கு மாற்ற ஆர்பிஐ ஒப்புதல் அளித்துள்ளது. அதே நேரத்தில் தற்செயல் அபாய இடைமுகத்தை 5.50 சதவீதமாகப் பராமரிக்க முடிவு செய்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான இந்த கூட்டத்தில், துணை நிலை ஆளுநர்கள் மகேஷ் குமார் ஜெயின், மைக்கேல் தேபப்ரதா பத்ரா, எம். ராஜேஷ்வர் ராவ், எஸ்.டி. ரபி சங்கர் மற்றும் மத்திய வாரியத்தின் மற்ற இயக்குநர்கள் சதீஷ் கே.மராத்தே, எஸ்.குருமூர்த்தி, ரேவதி ஐயர் மற்றும் சச்சின் சதுர்வேதி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்திய ரிசர்வ் வங்கி உபரி நிதியை அரசுக்கு அளிப்பது ஏன்?
இந்திய ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் பத்திர முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருவாயில், ரூபாய் நோட்டுகள் அச்சிடுதல், நாணயங்கள் தயாரித்தலுக்குப் பிறகு அதனிடம் உபரியாக இருக்கும் தொகையில் ஒரு பகுதியை உபரியாக மத்திய அரசுக்கு அளிக்கும்.
ஆர்பிஐ அளிக்கும் உபரித் தொகையை, நெருக்கடியில் உள்ள தொழில் துறைக்காக வரிகளைக் குறைக்க, கடன்களைக் குறைக்க மற்றும் வீட்டுவசதித் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிதி நிறுவனங்களுக்கு அதிக நிதி அளிக்க மத்திய அரசு பயன்படுத்தும்.
சென்ற ஆண்டு
2020-2021 நிதியாண்டில் கொரோனா தொற்றுக்கு எதிராக மத்திய அரசு திணறி வந்த நிலையில், 99 ஆயிரத்து 122 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு உபரி மற்றும் ஈவுத்தொகையாக ஆர்பிஐ வழங்கியது.
இந்த ஆண்டு குறைந்ததற்கு என்ன காரணம்?
இந்த ஆண்டு ஆர்பிஐ அளிக்கும் உபரித்தொகை குறைந்ததற்கு, ரிவர்ஸ் ரெப்போ வட்டியை வங்கிகளுக்குச் செலுத்தியது தான் காரணம் என கூறப்படுகிறது.
RBI Surplus Transfer To Govt Came Down To Rs 30,307 Crore. Why?
RBI Surplus Transfer To Govt Came Down To Rs 30,307 Crore. Why? | மத்திய அரசுக்கு ஆர்பிஐ வழங்கும் உபரி ரூ.30,307 கோடியாக சரிவு.. என்ன காரணம்?