மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் ,அதிகாரிகள் அடுத்த வாரம் அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் அழைப்பு

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை அடுத்தவாரம் அழைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் நேற்று (19) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், 1969ஆம் ஆண்டு 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 2022.04.08ஆம் திகதிய 2274/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட 2022ஆம் ஆண்டு 06ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதி என்பன நிதி பற்றிய குழுவினால் அனுமதிக்கப்பட்டன.

இறக்குமதிக் கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவை உள்ளூர் கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதிக்கான பொருட்களுக்காக சேமிப்பது இந்த வர்த்தமானி அறிவித்தலின் நோக்கமாகும்.

இதற்கமைய தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களில் 369 பொருட்களுக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு அனுமதிப் பத்திரத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் ஒழுங்கு விதிகளை விதிக்கும் 2022.04.09 திகதிய 2274/42 இலக்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2022 ஏப்ரல் 10ஆம் திகதி அல்லது இதற்குப் பின்னர் கடல் மார்க்கமாக அல்லது ஆகாய மார்க்கமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு இந்த ஒழுங்குவிதி ஏற்புடையதாகும்.

கைக்கடிகாரங்கள் மற்றும் கடிகாரங்கள், தொலைத்தொடர்பு  சாதனங்கள் மற்றுமு் உதிரிப்பாகங்கள், பால் உற்பத்திப் பொருட்கள், மதுசாரம், அழகு சாதனப் பொருட்கள், மெழுகுவர்த்திகள், விளக்குகள், பழங்கள், ரப்பர் உற்பத்திப் பொருட்கள்  (டயர்கள் மற்றும் அழிப்பான்கள்), மின் சாதனங்கள் மற்றும் இலத்திரனியல் தயாரிப்புக்களில் இதில் அதிகமாகக் காணப்படுவதுடன், மொத்த இறக்குமதியில் இவை 84 வீதமாகும்.  அதன்படி, இந்தப் பொருட்களின் இறக்குமதிக்காக கடந்த மூன்று வருடங்களில் ஒப்பீட்டளவில் செலவிடப்பட்ட 512 மில்லியன் அமெரிக்க டொலரில் கணிசமான அளவை உள்நாட்டுக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதியில் உள்ளடக்காமல் சேமிக்க முடியும் என்பது இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தில், அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ இந்திக அனுருத்த, கௌரவ (வைத்தியகலாநிதி) ஹர்ஷ டி சில்வா, கௌரவ முஜிபுர் ரகுமான், கௌரவ இசுரு தொடங்கொட, கௌரவ நளின் பெர்னாண்டோ, கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார மற்றும் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன் ஆகியோரும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.