மயிலை கபாலீசுவரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பு சொத்துகள் மீட்பு! அறநிலையத்துறை தகவல்…

சென்னை: மயிலையே கயிலை என அழைக்கப்படும் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்ற ஓராண்டில், ரூ. 2,000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்திருக்கிறது. மேலும், ஆக்கிரமிப்பு செய்வர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல, ஆக்கிரமிப்பில் இருக்கும் அனைத்து கோயில்களின் நிலங்களும் மீட்கப்படும். தவிர, கோயிலுக்குச் சொந்தமான இடங்களை அளவீடு செய்யும் பணிகளும் நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.15 கோடி  மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து இந்து சமயஅறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான லஸ் சர்ச் சாலை இடத்தில் 3 கிரவுண்ட் 736.5 சதுர அடியில் அமைந்துள்ள ரானடே நூலகத்திற்கு தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை உத்தரவின் அடிப்படையில் தனியே வாடகை நிர்ணயம் செய்து திருக்கோயிலின் நேரடி வாடகைதாரராக மாற்றப்பட்டது. ரானடே நூலகத்திற்கு நியாய வாடகை 0.1 சதவிகிதத்தில் நிர்ணயம் செய்யப்பட்டது.

மேற்படி நிறுவனம் தற்போது கட்டிடத்தின் மாடி பகுதியில் வணிக நோக்கில் பட்டய வகுப்பு, கச்சேரி ஆகியவற்றிற்கு வாடகைக்குவிட்டு வாடகை வசூல் செய்து வருகின்றனர். இந்நிறுவனம் இயங்கி வரும் கட்டிடத்தின் முதல் மாடியில் மேற்கூரையை அகற்றிவிட்டு தளத்துடன் கூடிய முதல் தளம் கட்டிடம் கட்ட துறை மற்றும் திருக்கோயிலுக்கு மனு செய்து அனுமதி உத்தரவு வழங்கும் முன்பாகவே, அனுமதியின்றி முதல் தளம் கட்ட முயற்சி செய்யப்பட்டதை தொடர்ந்து விளக்கங்கள் கோரி அறிவிப்பு அனுப்பப்பட்டு, உரிய கால அவகாசம், வாய்ப்புகள் வழங்கப்பட்டும் அந்நிறுவனம் விளக்கம் ஏதும் அளிக்காமல் துறை விதிமுறைகளுக்கு முரணாக அனுமதி பெறாமல் வர்தா புயல் கால கட்டத்தில் திருக்கோயில் அனுமதியின்றி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

மேற்படி நிறுவனத்தின் வாடகை உரிமம் ரத்து செய்யப்பட்டது. அரசாணைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளின் படி  திருக்கோயிலுக்குச் சொந்தமான அனைத்து கட்டிடங்கள்/ மனைகளுக்கு நியாய வாடகை நிலுவைகளை செலுத்திட கோரி அறிவிப்பு அனுப்பப்பட்டது. ரானடே நிறுவனத்தாருக்கும் உபயோகபடுத்தியமைக்கான நியாய வாடகை நிலுவைகளை செலுத்திட கோரி அறிவிப்புகள் அனுப்பப்பட்டது. நிறுவனத்தார் நியாய வாடகையை செலுத்தாததால் நேற்று  சொத்தில் பொருட்களுடன் சீலிடப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.

இதன் நியாய வாடகை நிலுவையாக ரூபாய் 79,10,860 உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.