புதுடில்லி : முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை, ஜூலையில் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 27 சதவீத இடங்களும், பொருளாதரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீத இடங்களும் ஒதுக்கி, மத்திய அரசு கடந்தாண்டு அரசாணை பிறப்பித்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி அளித்தது. அதே நேரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டில், ஆண்டு வருவாய் உச்ச வரம்பாக 8 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தது.இருப்பினும், 2021 – 2022 கல்வியாண்டில் மட்டும், இந்த இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி அளிப்பதாகவும், அடுத்த கல்வியாண்டில் தொடருவது குறித்து விரிவாக விசாரிப்பதாகவும் கூறியிருந்தது.
இந்நிலையில், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த், பி.எஸ்.நரசிம்மா அமர்வில், இந்த விவகாரம் தொடர்பாக அவசரமாக விசாரிக்கும்படி, மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாடர் நேற்று வலியுறுத்தினார். இதையடுத்து, கோடை விடுமுறைக்குப் பின், ஜூலையில் விசாரிப்பதாக அமர்வு கூறியுள்ளது.
Advertisement