மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி:

இந்தியாவில் உள்ள மலை வாசஸ்தலங்களில் நீலகிரி மாவட்டம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் விதமாக ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆன்லைன் வாயிலாக கண்காட்சி நடந்தது. மக்கள் வீட்டில் இருந்தபடி தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வண்ண செடிகளை கண்டு ரசித்தனர்.

தற்போது தொற்று முழுவதும் குறைந்து சுற்றுலா பயணிகள் வருகையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி 20-ந்தேதி இன்று முதல் வருகிற 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் மலர் மாடங்களை பார்வையிடுகிறார்.

இந்த நிலையில், மலர்க்கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.