மாலைநேர மல்லிப்பூ : சினிமா ஆகிறது பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் மாலைநேர மல்லிப்பூ. 21 வயது இளைஞர் சஞ்சய் நாராயண் இயக்குகிறார். விஜயலட்சுமி நாராயணன் தயாரிக்கிறார். ஹிர்த்திக் சக்திவேல் இசை அமைக்கிறார். நாய்துப் டோர்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சஞ்சய் நாராணயன் கூறியதாவது: பாலியல் தொழிலாளி ஒருவரின் ஆட்டோகிராப் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த படம் இருக்கும். நான் கேள்விப்பட்ட ஒரு பாலியல் தொழிலாளியின் கதை. பாலியல் தொழிலாளி பாத்திரத்தில், பிரபல தியேட்டர் ஆர்டிஸ்டான வினித்ரா மேனன் நடித்துள்ளார். அவரது பத்து வயது மகனாக குழந்தை நட்சத்திரம் அஸ்வின் நடித்துள்ளார்.
மிக இளம் வயதில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட லட்சுமியின் வாழ்வில் அவர் சந்திக்கும் வாடிக்கையாளர்கள், அவரது வீட்டு உரிமையாளர், சக பாலியல் தொழிலாளிகள் ஆகியோருடன் அவருக்கு நிகழும் அனுபவங்களை சொல்லும் படம். இந்த சிக்கலான வாழ்க்கை சூழலில், தனது இருட்டான பக்கங்களை மறைத்து, பத்து வயதே ஆன, 'என் அப்பா யார் என்று சதா கேள்வி எழுப்பி வரும் மகனை வளர்த்தெடுக்க அவர் காட்டும் தாய்ப்பாசம் படத்தின் முக்கிய பகுதி. ஓடிடி தளத்தில் வெளியாகிறது. என்றார்.