மும்பை,
ஐபிஎல் 15-வது சீசனில் இன்று நடைபெற்று வரும் 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 2 ரன்களில் டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து டெவோன் கான்வே உடன் மொயின் அலி ஜோடி சேர்ந்தார்.
டிரென்ட் போல்ட் வீசிய 6-வது ஓவரில் மொயின் அலி ஒரு சிக்சர், 5 பவுண்டரி அடித்தார் . அந்த டிரென்ட் போல்ட்- யின் ஒரே ஓவரில் மொயின் அலி 26 ரன்கள் குவித்தார்.
16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கான்வே ஆட்டமிழந்தார். மொயின் அலி ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மறுமுனையில் ராயுடு, ஜெகதீசன் அனைவரும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் தோனி – மொயின் அலி ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 19-வது ஓவரில் தோனி 26 ரன்கள் எடுத்து சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடி வந்த மொயின் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது.
ராஜஸ்தான் அணி தரப்பில் சஹால், மெக்காய் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.