‘இந்தி திணிப்பு’ சர்ச்சை தொடரும் நிலையில், மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட சில அரசியல் கட்சிகள் முயற்சி செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்களுடன் காணொளி மூலம் உரையாடிய பிரதமர் மோடி, அனைத்து மாநில மொழிகளுக்கும் புதிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியின் கருத்துகள் சமீப காலமாக தொடர்ந்து வரும் ‘இந்தி திணிப்பு’ குறித்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் விதமாக உள்ளது எனக் கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாக மொழியின் அடிப்படையில் சர்ச்சைகளை உண்டாக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்தி மற்றும் சமஸ்கிருதம் போன்ற மொழிகளை திணிக்கக் கூடாது என எதிர்ப்புத் தொடரும் நிலையில் பிரதமர் மோடி இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார். எந்த ஒரு கட்சியின் பெயரையும் குறிப்பிடாமல், மொழியை மையப்படுத்தி அரசியல் செய்ய முயற்சி நடைபெறுகிறது என சூசகமாக குற்றம்சாட்டினார். ஒவ்வொரு மாநில மொழியும் நம் நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கிறது என பிரதமர் மோடி பேசினார்.
ஒரு மொழி பேசும் மாநிலத்தைச் சேர்ந்த அரசு, வேறு ஒரு மொழி பேசும் மாநிலத்தைச் சேர்ந்த அரசுடன் தொடர்பு கொள்ளும்போது, ஆங்கில மொழியை பயன்படுத்தாமல் அதற்கு பதிலாக இந்தியை பயன்படுத்தலாம் என சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்றும் இந்தியை திணிக்கக் கூடாது எனவும் தென் மாநிலங்களில் இருந்து கருத்துகள் வெளிவந்துள்ளன.
சினிமா துறையை சேர்ந்தவர்களும் இது குறித்த கருத்துக்களை வெளியிட்டுள்ள நிலையில் சமீபத்தில் வெளிவந்த தெலுங்கு மொழி திரைப்படங்கள் நாடு முழுவதும் வெற்றி பெற்றுள்ளன என்றும் இந்தி மொழியை தேசிய மொழியாக வற்புறுத்தக் கூடாது எனவும் சினிமா துறையினர் குறிப்பாக தெலுங்கு சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உள்ளிட்டோர் தமிழ் மொழியின் தொன்மையை வலியுறுத்தி இந்த விவகாரத்தில் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில்தான் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில மொழிகளும் இந்தியாவின் மொழிகள் என்றும் ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். மாநில மொழிகளை சமமாக மதிப்பதாகவும், பாரதிய ஜனதா கட்சியோ அல்லது மத்திய அரசு இந்தி திணிப்பில் ஈடுபடவில்லை எனவும் தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடியின் பேச்சு அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
சமுதாயத்தில் உள்ள பலவீனங்களை பயன்படுத்தி மொழி ரீதியாகவோ, மத ரீதியாகவோ, அல்லது ஜாதி ரீதியாகவோ விளைவுகளை ஏற்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். வளர்ச்சியே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்களிடம் பிரதமர் மோடி தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார். நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும் என பிரதமர் மோடி பாஜக பொறுப்பாளர்களிடம் கோரிக்கை வைத்தார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து இந்த மாதத்துடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, மத்திய அரசு தொடர்ந்து ஏழைகளின் நல்வாழ்வு, மற்றும் நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறது என குறிப்பிட்டார். நாட்டின் வளர்ச்சியே நமது பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் பிரிவினை சர்ச்சைகளில் ஈடுபடும் பிற கட்சிகளை கூட வளர்ச்சி அரசியலில் கவனம் காட்ட வலியுறுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
– கணபதி சுப்ரமணியம்
இதையும் படிக்கலாம்: `சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM