மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இரண்டு தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால் அடிதடி வாக்குவாதம்- வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவியுள்ளன.
மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவாயில் அருகில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு பணிபுரியும் இரண்டு ரயில்வே தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக வாய்த்தகராறு முற்றி ரயில்வே ஊழியர்கள் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கேட்ட போது, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரியை சந்திக்கும் போது தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் அமைப்பை சேர்ந்த கோட்ட செயலாளர் முகமது ரபீக் என்பவர் சங்க நிர்வாகிகளுடன்,
தெற்கு ரயில்வே எம்பிளாயிஸ் சங்கத்தை சேர்ந்த தலைவர் நாகேந்திரனை அதிகாரி அறை முன்பாகவே கடுமையாக பேசி தாக்கியதால் இரு தரப்பு ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை ஏற்பட்டதாகவும், மூத்த நிர்வாகிகள் தலையீட்டால் சிறிது நேரத்தில் தடுக்கப்பட்டு பிரச்சனை முடிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.