டெல்லி : லடாக் எல்லையில் இந்திய பகுதியை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அரிந்தம் பாக்சி, பான்காங் பகுதியில் சீனா கட்டியுள்ள புதிய பாலம் ஏற்கனவே கட்டப்பட்ட முதல் பாலத்தின் விரிவாக்கமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் முடிந்தன. இந்த பாலத்தின் வழியாக ஆயுதம் தாங்கிய கனரக வாகனங்கள் எளிதாக இந்திய எல்லை வர முடியும். இது தொடர்பாக பதில் அளித்த செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, சீனாவின் நகர்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார். பான்காங் ஏரி பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு உறுதி தான் என்றும் அவர் கூறியுள்ளார். எல்லையில் பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதையும் அரிந்தம் பாக்சி சுட்டிக் காட்டியுள்ளார். இதனிடையே கொரோனா காரணமாக தாய்நாடு திரும்பிய மாணவர்கள், மீண்டும் சீனா சென்று கல்வியை தொடர அந்நாட்டு அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.