புதுடில்லி : ஜூன் – ஜூலை மாதங்களில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவில், 191 கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்தியசுகாதார துறை செயலர்ராஜேஷ் பூஷண், அனைத்து மாநிலங்களுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளார். அதன் விபரம்:ஜூன் முதல் ஜூலை வரை வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் யாரும் இல்லை என்ற வகையில் அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இதற்காக குக்கிராமங்கள்,முதியோர் இல்லங்கள், பள்ளிகள், கல்லுாரிகள்,சிறைச்சாலைகள், செங்கல் சூளைகள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். விரைவில் காலாவதியாகக்கூடிய தடுப்பூசிகளை முதலில் பயன்படுத்த வேண்டும். வெளிநாடு செல்வோர் ‘பூஸ்டர்’ தடுப்பூசிக்கு விண்ணப்பிக்கும் போது, பயண ஆவண நகல்களை கோருவதாக புகார்கள் வந்துள்ளன. அவ்வாறு ஆவண நகல்களை கேட்கக் கூடாது என சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘தடுப்பூசி செலுத்துவதில் இளைஞர்கள் ஆர்வம்
‘
‘நாட்டில், 15 முதல் 18 வயது வரை உள்ள இளம் தலைமுறையினரில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டில், 15 முதல் 18 வயது வரையிலான இளம் தலைமுறையினரில், 5.91 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் ‘டோஸ்’ செலுத்தப்பட்டுள்ளது. இவர்களில், 4.45 கோடி பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்
பட்டுவிட்டது. மேலும், 12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு மார்ச் 16 முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கப்பட்டன. இவர்களில், 3.24 கோடி பேருக்கு முதல் டோசும், 1.33 கோடி பேருக்கு இரண்டாவது டோசும் செலுத்தப்பட்டுள்ளன. இது பற்றி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், ”இளைய தலைமுறையினர் மத்தியில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. ‘வெல்டன்’ இளைய இந்தியா. ஆபத்தான தொற்றுநோய்க்கு எதிரான போரில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து வென்று காட்டுவோம்,” என்றார்.
– நமது டில்லி நிருபர் –
Advertisement