புதுடெல்லி: உத்தர பிரதேசம் மதுராவின் ஷாயி ஈத்கா மசூதி நிலத்தை கிருஷ்ணர் கோயிலிடம் ஒப்படைக்கக் கோரும் சீராய்வு மனுவை மதுரா மாவட்ட நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றது.
உத்தர பிரதேசத்தின் புனித நகரமான மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயில் உள்ளது. இந்த இடத்தில்தான் கிருஷ்ணர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இங்கு இருந்த பழமையான கிருஷ்ணர் கோயில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் உத்தரவால் கோயில் இடிக்கப்பட்டு அங்கு 13.37 ஏக்கரில் ஷாயி ஈத்கா மசூதி கட்டப்பட்டதாக புகார்கள் உள்ளன. இந்த பிரச்சினையில் மதுரா கோயில் மற்றும் மசூதி நிர்வாகத்துக்கு இடையே கடந்த 1968-ம் ஆண்டில் ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி, மசூதியை ஒட்டி புதிய கிருஷ்ணர் கோயில் கட்ட எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால், 1990-களில் பாபர் மசூதி விவகாரம் எழுந்த பிறகு மதுராவின் ஈத்கா மசூதிக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன. எனினும் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அமலான புனிதத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ஐ சுட்டிக் காட்டி இந்த வழக்குகளை நீதிமன்றங்கள் ஏற்கவில்லை.
இச்சட்டத்தின்படி சுதந்திரத்துக்கு பிறகு அனைத்து மதத்தின் புனிதத் தலங்களை எவரும் சொந்தம் கொண்டாட முடியாது. எனினும் சுதந்திரத்துக்கு முன்பு தொடுக்கப்பட்ட வழக்கு என்பதால் அயோத்தி நில வழக்குக்கு மட்டும் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இவ்வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதித்தது.
இந்த தீர்ப்புக்கு பிறகு மதுரா நிலப் பிரச்சினை மீண்டும் எழத் தொடங்கியது. இதுதொடர்பாக மதுராவின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. குறிப்பாக கடந்த ஆண்டு லக்னோவை சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சனா அக்னிஹோத்ரி உட்பட 6-க்கும் மேற்பட்டவர்கள், ஷாயி ஈத்கா மசூதி நிலத்தை கிருஷ்ணர் கோயிலிடம் ஒப்படைக்கக் கோரி மதுரா சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த மனு ஏற்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இதை விசாரணைக்கு ஏற்க கடந்த வாரம் சீராய்வு மனு தாக்கல் செய்யப் பட்டது. இதை விசாரித்து மதுரா மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. வரும் ஜூன் 1-ம் தேதி மனு விசாரணைக்கு வருகிறது.
கடந்த 1968-ம் ஆண்டில் மதுரா கோயில் மற்றும் மசூதி நிர்வாகத்தினரால் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரும் இந்த மனுவில், ‘புனிதத் தலங்களுடன் மாநிலத்தின் சட்டம், ஒழுங்கை காப்பது மாநில அரசுகளின் கடமை. இதன் மீதான சட்ட, திட்டங்களை வகுக்க மாநில அரசுகளுக்கு மட்டுமே உரிமை உண்டு. இச்சூழலில் மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிட்டு புனிதத்தலங்களுக்காக 1991-ம் ஆண்டில் ஒரு சட்டம் இயற்றியது தவறானது. இது, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. எனவே, மத்திய அரசு 1991-ல் இயற்றிய சட்டத்தை ரத்து செய்து, செல்லாதது என அறிவிக்க வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.