மதுரை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முடிக்காமல் தாமதம் செய்து வரும் ஒப்பந்தம் எடுத்த நிறுவனதிற்கு தினமும் அபராதத்துடன் கூடிய நடவடிக்கையாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கவுள்ளது.
மதுரை மாநகராட்சியில் ரூ.995.55 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் 14 திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இவற்றில் பெரியார் பஸ் நிலையம், குன்னத்தூர் சத்திரம் தவிர மற்ற திட்டங்கள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. பெரியார் பஸ்நிலையம் வணிக வளாகம் கட்டுமானப் பணி மிக தாதமாக நடக்கிறது.
அதுபோல், தமுக்கம் மைதானத்தில் உள்ள கலாச்சார மையம் கட்டிடமும் தாமதமாகி கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் இதுவரை 60 சதவீதம் மட்டுமே நிறைவடைந்து இருக்கிறது. கட்டுமானப் பணிகள் நடக்கிற இடங்களில் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், குறைவான பணியாளர்களுடன் பணியை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதேநிலை நீடித்தால் இன்னும் இந்தத் திட்டம் தாமதமாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன், மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன் மற்றும் அதிகாரிகள், ஒப்பந்தம் எடுத்த நிறவன அதிகாரிகளை அழைத்துப் பேசி விரைவாக பணிகளை முடிக்கவும், பணிகள் நடக்கும் இடத்தில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ஒருவரை கண்காணிக்க பணிநியமனம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட மிக தாமதமாக பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்திற்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்க நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”நோட்டீஸ் வழங்கப்படுவதுடன் தினமும் அபராதமும் அந்த நிறுவனத்திற்கு விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், அந்த நிறுவனம் மீண்டும் ஒப்பந்தம் எடுத்து நடத்துவதில் சிக்கல் ஏற்படும். கூடுதல் பணியாளர்களை நியமித்து விரைவாக பணிகளை முடிக்க அறிவுரை வழங்கியிருக்கிறோம்” என்றார்.