தோனியால் 2020-ல் சொல்லப்பட்ட “Definitely Not” க்கும், இந்த ஆண்டு அதைச் சற்றே மாற்றிக் கூறப்பட்ட “Definitely”க்கும் இடையே இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இருப்பினும், `அவரது இருப்பு மட்டுமே போதும்’ என்ற மனநிலையிலிருந்து ரசிகர்கள் மாறவே இல்லை. “அடுத்த சீசனும் ஆடுவேன்” என்ற அவரது கூற்றே போட்டியைத் தொடங்குவதற்கு முன்னதாகவே வென்றுவிட்ட திருப்தியை அவர்களுக்குக் கொடுத்தது.
ராஜஸ்தானைப் பொறுத்தவரை 2008-க்குப் பிறகு அவர்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்து வந்த டாப் 2 இடத்தில் இந்தாண்டாவது முடிக்க வேண்டும் என்ற நினைப்பே உத்வேகத்தை இரட்டிப்பாக்கியது. ‘பெஞ்ச் பலப் பரிசோதனையை எல்லாம் அடுத்தாண்டுக்குத் தள்ளி வைப்போம்’ என இருபக்கமும் ஒரேயொரு மாற்றமாக, ஷிவம் துபே, நீசமுக்குப் பதிலாக, முறையே அம்பத்தி ராயுடு மற்றும் ஹெட்மயருக்கு நல்வரவு சொல்லியிருந்தனர்.
லெஃப்ட் ஆர்ம் வேகப்பந்து வீச்சாளர்களும், ஸ்விங் ஆகும் பந்துகளும் கெய்க்வாட்டின் விரோதிகள் என்றால் போல்ட் அவரது பரம எதிரி. ‘மற்றவர்களுக்குத்தான் டிரென்ட் போல்ட், கெய்க்வாட்டுக்கு மட்டும் டெரர் போல்ட்’ என்பது மட்டும் என்றும் பசுமையாகத் தொடரும் போலும்; முன்னதாக, மூன்று சந்திப்புகளில் இருமுறை அவரது விக்கெட்டை எடுத்திருந்த போல்ட், மூன்றாவது முறையாக அதனை, அதுவும் முதல் ஓவரிலேயே செய்து காட்டினார்.
ஒற்றை இலக்கத்தோடு சிஎஸ்கேயின் ஸ்பார்க் அணைந்து போக, ஸ்கோர்போர்டைக் கொழுந்துவிட்டு எரிய வைக்க வேண்டிய முழுப் பொறுப்பு மொயினிடம் வந்து சேர்ந்தது. பிரஷித் வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரில் தான் செட்டில் ஆகத் தேவையான காலத்தை எடுத்துக் கொண்டவர், அங்கிருந்து டாப் கியரில் சிஎஸ்கே-வைப் பயணிக்க வைத்தார். சினிமாவிற்கு வந்து சேரும் கூட்டம் போல் முன்னதாக ஒவ்வொன்றாக வந்த ரன்கள், அடுத்த நான்கு ஓவர்களிலும் சினிமா முடிந்து போகும் கூட்டம் போல் மொத்தமாகச் சேர்ந்து கொண்டிருந்தன.
லைனைப் பிக் அப் செய்வதிலிருந்து சரியாக டைமிங் செய்வது வரை, சர்வதொழில் சுத்தத்தோடு கிளாசிக்கல் ஷாட்களை கண்களுக்கு விருந்தாக்கினார் மொயின். பல சீசன்களுக்கு முன்னால் பர்விந்தர் அவானாவின் ஓவரில் 33 ரன்களை விளாசிய ரெய்னாவை ஒருமுறை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டது மொயினுக்கு போல்ட் வீசிய ஓவர். டீப் பேக்வேர்ட் ஸ்கொயரில் பறந்த சிக்ஸரோடு அதிரடியாக ஆரம்பித்தவர், ஹாட்ரிக் பவுண்டரிக்குத் துணையாக பேக் டு பேக் பவுண்டரி என ஐந்து பவுண்டரிகளோடு 26 ரன்களை அடித்து விளாசினார். அந்த ஓவரில் 19 பந்துகளில் அரைசதமும் வந்து சேர்ந்தது. பவர்பிளேயிலேயே 75 ரன்கள் வந்துவிட்டன. அடை ரன் மழையைப் பொழிய வைத்திருந்தார் மொயின்.
பவர்பிளே பின்னடைவை, மிடில் ஓவர்களில் நேர் செய்தது, ராஜஸ்தான். 7 – 15 ஓவர்களில் வெறும் 4.67 ரன்ரேட்டோடு மொத்தமே 42 ரன்கள் மட்டுமே வந்து சேர்ந்திருந்தன. கான்வேயோடு ஜெகதீசன், ராயுடுவும் வந்து கிளம்பியிருந்தனர். மொயின் – கான்வே பார்ட்னர்ஷிப்பை முறித்து அஷ்வின் ஆரம்பிக்க, மெக்காயின் ஆஃப் கட்டர் ஜெகதீசனை ஆஃப் செய்ய, சஹாலின் லெக் பிரேக், ராயுடுவுக்கும் ஃபேர்வெல் தந்தது. இதோடு 18 டாட் பால்கள் சிஎஸ்கேயின் பலவீனத்தைக் கூண்டில் ஏற்றின. ஓடாத படத்துக்கான கூட்டம் போல் ஆகிவிட்டது பவர்பிளேவுக்குப் பின் ரன் வந்த விதம்.
டெத் ஓவர்களில் மொயின் – தோனி கூட்டணி, அடித்து ரன் ஏற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதைக் கொஞ்சமும் நடக்கவிடாமல் இறுக்கிப் பிடித்தனர் ராஜஸ்தான் பௌலர்கள். மிட் விக்கெட்டின் மேல் பறந்த தோனியின் சிக்ஸர், மொயின் அடித்த இரண்டு பவுண்டரிகளைத் தவிர, வேறெதுவும் சிஎஸ்கேவுக்குச் சாதகமாக நடக்கவில்லை. பவர்பிளேவுக்கு முன், பவர்பிளேவுக்குப் பின் எனுமளவு, மொயின் அலியின் ரன்குவிப்பும் கட்டுப்படுத்தப்பட்டது. மறுமுனையில் விழுந்து கொண்டிருந்த விக்கெட்டுகளும் அதற்குக் காரணம். அவரது சதமடிக்கும் வாய்ப்பையும் மெக்காயின் ஸ்லோ பால் தட்டிப் பறித்தது. 19-வது ஓவரில் சஹாலை தோனிக்கு வீசவைத்த நகர்வு அவர்களுக்குக் கை கொடுத்தது.
பவர்பிளேயிலேயே 75 ரன்கள், மீதமிருந்த ஓவர்களிலும் மொத்தமே 75 ரன்கள் எனத் தட்டித் தடுமாறி, 150 ரன்களில் வந்து நின்றது சிஎஸ்கே. இதில் 93 ரன்கள் மொயினால் அடிக்கப்பட்டன. ஃப்ளாட் பிட்சில் பார் ஸ்கோர் 180-ஐ எட்டக்கூடிய ஒரு பிட்சிலேயே ரன் சேர்க்க சிஎஸ்கே திணறியது, அவர்களது பேட்டிங் குறைபாடை மட்டுமின்றி ஃபினிஷருக்கான பஞ்சத்தையும் வெளிக்காட்டியது.
பட்லருக்கு பவர்பிளே, ஹெட்மயருக்கு டெத் ஓவர் எனப் பிரித்து அடித்தாலே இந்த இலக்கை எட்டிவிடலாம். அதனைத் தடுக்கும் பௌலிங் படைபலம் சிஎஸ்கே வசம் இல்லை என்பதால் டேபிளில் முன்னேறும் வாய்ப்பை ராஜஸ்தான் முதல் பாதி முடிந்த உடனே உறுதி செய்துவிட்டது. அதனை இன்னமும் ஊர்ஜிதப்படுத்தி குஜராத்தை குவாலிஃபயரில் எப்படி வீழ்த்தலாம் என்ற வியூகங்களை சங்கக்கராவை யோசிக்க வைத்துவிட்டது பவர்பிளே ஓவர்களின் முடிவுகள்.
பட்லரை அனுப்ப மொயினை சீக்கிரமாகவே இறக்கலாமா என தோனி யோசிக்க ஆரம்பிப்பதற்கு உள்ளாகவே இரண்டாவது ஓவரிலேயே அதனை சிமர்ஜீத் சிங் செய்து முடித்துவிட்டார். அச்சுறுத்துவார் என அனுமானிக்கப்பட்ட பட்லர் அவுட் ஸ்விங்கரில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனாலும் 52/1 என சேஃப்டி ஜோனில்தான் பயணித்தது ராஜஸ்தான். சிஎஸ்கேயும் பௌலிங் மாற்றங்களால் பயமுறுத்தவில்லை. முகேஷுக்கும், சிமர்ஜீத்துக்கும் தலா மூன்று ஓவர்களைப் பங்கிட்டுக் கொடுத்தது சென்னை.
அங்கிருந்து சிஎஸ்கே இன்னிங்ஸின் அச்சுப் பிரதியாக மிடில் ஓவர்கள் மாறின. அந்த இடைவெளியில் மூன்று விக்கெட்டுகள் விழுந்தன. சாம்சனின் விக்கெட்டை சான்ட்னர் வீழ்த்தினார். எப்பொழுதும் சிறப்பாகத் தொடங்கி அதை முன்னெடுத்துச் செல்லாமல் முடிப்பது சாம்சன் பாணி. ஆனால், இந்த இன்னிங்ஸில் தொடக்கம் முதல் தடுமாற்றம் மட்டுமே அவரிடமிருந்தது. இது தொடக்கமே என்பதுபோல் படிக்கல்லை மொயின் வீழ்த்த, ஓப்பனராக இறங்கி மிகவும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஜெய்ஸ்வாலை சோலாங்கி வெளியேற்றினார்.
அடுத்தடுத்து துரிதகதியில் பார்ட்னர்ஷிப்கள் உடைக்கப்பட்டாலும் 47 ரன்கள்தான் ஸ்லாக் ஓவர்களில் தேவை; “இது சுலபமே… அதுவும் ஹெட்மயர் இருக்கையில் எல்லாம் சுபமே” என ரிலாக்ஸான ராஜஸ்தான் ரசிகர்களுக்கு பேரிடியைப் பார்ஸல் செய்தார் சோலாங்கி. அவர்களது ஆஸ்தான ஃபினிஷர் ஹெட்மயரை வெளியேற்றி சிஎஸ்கேவுக்கு வெளிச்சப் புள்ளியைக் காட்டினார். போட்டி இறுதி ஓவர் வரை செல்வதையும் இந்த விக்கெட்தான் உறுதி செய்தது.
தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் ஆங்கர் ரோலில் அணியை மூழ்காமல் காப்பாற்றினார் என்றால் அஷ்வின்தான் அணியைக் கரை சேர்த்தார். 23 பந்துகளில் 40 ரன்களைக் குவித்து இந்த சீசனில் தனது முக்கியமான இன்னிங்ஸினை ஆடினார். விக்கெட்டுகளை வீழ்த்துவது மட்டுமில்லாமல் பேட்ஸ்மேனாகவும், தொடர்ந்து கேம் சேஞ்சர் அவதாரம் எடுக்கிறார் அஷ்வின். ஹெட்மயருக்கும், பராக்குக்கும் முன்பாக அவரை அனுப்பிய முடிவு அவர்களுக்குக் கை கொடுத்தது. இரண்டு புள்ளிகளோடு இரண்டாவது இடத்துக்கு முன்னேறியதோடு பிளேஆஃப்புக்கு டாப் 2-வில் தகுதி பெற்றது ராஜஸ்தான்.
வெற்றி முகத்தோடு தொடரை முடிக்க நினைத்த சிஎஸ்கேவுக்கு தேவையானவற்றை அவர்களது பேட்ஸ்மேன்கள் செய்யவில்லை. இன்னமும் 20 ரன்கள் சேர்த்து வந்திருக்கும் பட்சத்தில் வெற்றி சிஎஸ்கே பக்கம் சேர்ந்திருக்கலாம். அடுத்த சீசனில், “மீண்டு வருவோம்” என தோனி சொல்லிச் சென்றுள்ளதை வாக்குறுதியாக எடுத்து சிஎஸ்கே ரசிகர்கள், மனதைத் தேற்றிக் கொண்டனர்.
மூன்று அணிகள் பிளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில் இன்னொரு அணியை இறுதி செய்யும் வாய்ப்பு, முன்னாள் சாம்பியனான மும்பையின் கையில் உள்ளது. அது ஆர்சிபியா அல்லது டெல்லியா என்பதைத் தெரிந்து கொள்ள இன்னமும் ஒரு போட்டியின் முடிவு வரை காத்திருக்க வேண்டும்.
அதேசமயம், குவாலிஃபயரில் குஜராத்தை எதிர் கொள்ள உள்ளது ராஜஸ்தான். இதற்கு முன்னதாக 2008-ல், அவர்கள் டாப் 2-ல் முடித்த போது கோப்பை அவர்களுடையதானது. சரித்திரம் திரும்புமா?! பிளேஆஃப்புக்கான கவுன்டவுன் தொடங்கிவிட்டது.