எல்லா டாக்ஸி டிரைவர்களையும் குறை சொல்லிவிட முடியாது. ஆனால், சில டிரைவர்கள் வேண்டாவெறுப்பாக கார் ஓட்டுவதைப் பார்த்ததுண்டு. ‘OTP சொல்லுங்க…’ என்று அவர்கள் கேட்க ஆரம்பிப்பதில் இருந்து, சிலர் ‘இறங்கு சீக்கிரம்’ என்று காரோட்டுவது வரை சில டிரைவர்களின் அட்ராசிட்டியைப் பார்க்கும்போது, நமக்கு BP–யே எகிறவும் செய்யும்.
நமது வாசகிக்கே இப்படி ஒரு சம்பவம் நடந்தது. கர்ப்பிணிப் பெண்ணான அவர், அம்பத்தூருக்கு புக் செய்திருக்கிறார். அவர் புக் செய்த இடத்துக்குக் கொஞ்சம் தள்ளி 700 மீட்டரில்தான் அவரது வீடு. அங்கே இறக்கிவிடச் சொன்னபோது, ‘‘இங்கதான்மா நீங்க டெஸ்டினேஷன் போட்டிருக்கீங்க… அங்க போனா எக்ஸ்ட்ரா பேமென்ட் ஆகும்!’’ என்று அங்கேயே இறக்கிவிட்டிருக்கிறார்.
இது தவிர, ‘‘அண்ணா செக்–அப் போயிட்டு வர்றேன். கொஞ்சம் ஸ்லோவா ஓட்டுங்க!’’ என்று அவர் சொல்லியும், ‘‘அடுத்த க்ளெய்ன்ட் வெயிட்டிங்மா… நாங்க நாலு இடத்துக்குப் போக வேணாமா’’ என்றும் கடுமையாகவே ஓட்டியிருக்கிறார். நமது வலைதளத்தில் அந்தப் பெண் பேட்டி கொடுத்ததைத் தொடர்ந்து, அந்த ஓலா டிரைவர் மேல் நடவடிக்கை எடுத்ததாகச் சொன்னாலும்… இப்படி சில சம்பவங்கள் நம்மை விரக்திக்குள்ளாக்குவதும் உண்மை.
இது தவிர, ஏசி போட்டா தனி சார்ஜ்… புக் செய்யப்பட்ட தொகையைவிட எக்ஸ்ட்ரா தொகை வாங்கியது… காத்திருக்க வைத்துவிட்டு கேன்சல் செய்வது என்று டிரைவர்கள் மேல் எக்கச்சக்கப் புகார்கள். அப்படி உபர் எனும் டாக்ஸி நிறுவனத்தின் மீது புகார் சொல்ல, www.downdetector.com எனும் வலைதளம் ஒரு சர்வேயே நடத்துகிறது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 51 சதவிகிதம் ரைடு ரிக்வொஸ்ட் சம்பந்தமாகவும், ஆப் சம்பந்தமாக 27 சதவிகிதமும், பேமென்ட் தொடர்பாக 22 சதவிகிதமும் புகார்கள் சார்ட் ஆகியிருக்கின்றன.
சில வாரங்களாக – எரிபொருள் விலையேற்றத்தைக் காரணம் காட்டித்தான், சவாரிக் கட்டணம் சுமார் 15 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம்வரை ஏற்றியிருந்தார்கள். இது டிரைவர்களை பூஸ்ட் செய்யும் என்பதற்கான விஷயம். ஆனால், இதையே காரணம் காட்டி, சில டிரைவர்கள் எக்ஸ்ட்ரா தொகையையும் வசூலித்து வருகிறார்கள் எனும் புகார்களும் வந்தன.
ஆனால், இதற்கு டிரைவர்களை மட்டும் குறை சொல்லி என்ன செய்ய? டாக்ஸி நிறுவனங்களும் டிரைவர்களுக்கு முறையான அப்டேட்களைத் தெரிவிக்காததும், டிரைவர்களின் ஆர்வமின்மைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இப்படி வாடிக்கையாளர்களிடம் இருந்து பல புகார்கள் இந்திய அரசாங்கத்துக்கு எட்ட, நுகர்வோர் விவகார அமைச்சகத்துடன் மீட்டிங் போட்டு போன வாரம் டாக்ஸி நிறுவனங்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விதித்தது.
‘‘எங்கள் ஆப்களில் உள்ள குறைகளைக் களைந்து, வாடிக்கையாளர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்கிறோம்! கேன்சலேஷன்தான் பெரிய புகார்களாக வந்தது எங்களுக்கும் தெரிகிறது. எங்கள் செயலிகளில் சில வசதிகளை அப்டேட் செய்திருக்கிறோம். எங்களுக்கு டிரைவர்களும் முக்கியம்; வாடிக்கையாளர்கள் அதைவிட முக்கியம்!” என்று உபர் இந்தியா தலைவர் நித்திஷ் பூஷன் சொல்லியிருந்ததோடு, நேற்று இதற்கான நடவடிக்கையாக, சொன்னதுபோல் சில அட்வான்ஸ்டு அப்டேட்களையும் செய்துள்ளார்.
நாம் போய்ச் சேரும் இடத்தை இப்போது டிரைவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில், உபர் ஒரு அட்டகாசமான வசதி வழங்கியிருக்கிறது. இது தவிர, நமக்கு மட்டுமே தெரியும் அந்தக் கட்டணம், இனி டிரைவர்களுக்கும் தெரியுமாம். இப்போதைக்கு இந்தியாவில் 20 நகரங்களில் இதை நடைமுறைப்படுத்த இருக்கிறது உபர்.
இதுபோக, கூடுதல் வருமானத்தை டிரைவர்களுக்கு வழங்கவும் உபர் முடிவெடுத்திருக்கிறது. அதேபோல், பயணம் கிளம்பும்போதே Mode of Payment தொடர்பான விஷயத்தையும் டிரைவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இப்போதுபோல், ‘‘கூகுள் பேலாம் இல்லங்க. பணமா கொடுங்க!’’ என்று பயணம் முடிந்து இறங்கியபிறகு வாக்குவாதம் செய்ய அவசியம் இருக்காது.
இது தவிர, டிரைவர்களுக்கு ‘டெய்லி ப்ராசஸ்’ என்ற அடிப்படையில், டாக்ஸி நிறுவனங்கள் ட்ரிப் வருமானத்தை வழங்கவும் திட்டமிட்டிருக்கிறது. அதாவது, திங்கள் – வியாழன் வரை காரோட்டிச் சம்பாதித்த பணம், வெள்ளிக்கிழமை டிரைவர்கள் அக்கவுன்ட்டில் போய்ச் சேருமாம். அதேபோல், வெள்ளி–சனி–ஞாயிறு ஓட்டும் பணம், திங்கள்கிழமை ஆட்டோமேட்டிக்காக க்ரெடிட் ஆகும் வசதியையும் கொண்டு வந்திருக்கிறது உபர்.
அப்போ, இனிமேல் உபருக்கும் தனிநபருக்கும் தொடரும் புரிதலின்மை முடிவுக்கு வருமா?