பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் துணைத் தலைவர் மரியம் நவாஸை மோசமாக கமெண்ட் செய்த இம்ரான் கானுக்கு கடுமையான கண்டங்கள் எழுந்துள்ளன.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் துணைத் தலைவருமான மரியம் நவாஸை, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மோசமாக கமெண்ட் செய்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இம்ரான் கான் பேரணி ஒன்றில் உரையாற்றியபோது, ‘மரியம் நவாஸ் கவனமாக இருங்கள். நீங்கள் என் பெயரை இவ்வளவு அதிகமாக பயன்படுத்தக் கூடாது, ஏனென்றால் உங்கள் கணவர் மிகவும் வருத்தப்படுவார்’ என மோசமாக கிண்டல் செய்தார்.
அவரது இந்த கூற்று பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நாட்டின் தலைவர்கள், ஊடகங்கள் என பலரும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்த தற்போதைய பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், ‘தேசத்தின் மகள் மரியம் நவாஸுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட இழிவான வார்த்தைகள் இவை.
Photo Credit: Our Bureau, PTI
இதுபோன்ற கீழ்த்தரமான நகைச்சுவையின் கீழ், நீங்கள் நாட்டுக்கு எதிராக செய்த குற்றங்களை மறைக்க முடியாது. மஸ்ஜித் நபவியின் புனிதத்தை மதிக்க முடியாதவர்கள், ஒருவரின் தாயார், சகோதரிகள் மற்றும் அவர்களின் மகள்களின் மரியாதைக்கு எப்படி மதிப்பளிக்க முடியும்?’ என தெரிவித்தார்.
அதே போல் இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறுகையில், ‘வீட்டில் தாய், சகோதரிகளை வைத்திருப்பவர்கள், மற்ற பெண்களுக்கு எதிராக இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை’ என கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் மரியத்திடம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண்களிடமும் இம்ரான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், இத்தகைய வெளிப்படையான அரசியல் உரைகள் சகிப்பின்மை மற்றும் பாலின பாகுபாட்டிற்குள் சிதைந்து போவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் தெரிவித்துள்ளது.
Photo Credit: IANS