பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரேனிய பெண் ஒருவர் அரைநிர்வாணமாக கத்திக் கொண்டே ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
75வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் நடைபெற்று வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்களும் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த விழாவில் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி காணொளி வாயிலாக தோன்றி, போர் நடைபெறும் சூழலில் திரைப்படங்கள் வாயிலாக அவற்றை பதிவு செய்ய வேண்டும் என்றும், புரட்சியை பேசும் படங்களை எடுக்க வேண்டும் என்றும் உருக்கத்துடன் உரையாற்றினார்.
இந்த நிலையில், கேன்ஸ் விழாவில் திரைப்படம் ஒன்றின் திரையிடலின்போது, பெண்ணொருவர் அரைநிர்வாண கோலத்தில் எங்களை வன்புணர்வு செய்வதை நிறுத்துங்கள் என்று கத்தியபடி ஓடி வந்தார்.
அவர் உக்ரேனிய தேசிய கொடியின் வண்ணங்களில் வன்புணர்வு செய்வதை நிறுத்துங்கள் என்ற வாசகங்களை தனது உடலில் பூசியிருந்தார்.
Photo Credit: AP
அங்கிருந்த பாதுகாவலர்கள் விரைந்து வந்து ஒரு கோட் உடை கொண்டு அப்பெண் மீது போர்த்தி, அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
குறித்த பெண், உக்ரைனில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்புணர்வு கொடுமைகளுக்கு எதிராக போராடி வருபவர் என்று தெரிய வந்துள்ளது.
Photo Credit: AP
ரஷ்ய படைகள் உக்ரைனில் வன்புணர்வு சம்பவங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், உக்ரேனிய பெண்ணின் இந்த செயல் கேன்ஸ் விழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.