மும்பை,
15-வது ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 16 புள்ளியை எட்டுவதுடன் ‘ரன்-ரேட்’ அடிப்படையில் பெங்களூருவை பின்னுக்கு தள்ளி அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்று விடும்.
இதனால் பெங்களூரு அணி ரசிகர்கள் இன்று மும்பை அணியின் வெற்றிக்கு காத்திருக்கிறார்கள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலாவதாக பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வீஷா-டேவிட் வார்னர் ஜோடி களமிறங்கியது. இதில் டேவிட் வார்னர் 5 ரன்களில் டேனியல் சாம்ஸ் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிட்சேல் மார்ஷ் முதல் பந்திலேயே போல்ட் ஆகி வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் சற்று நிதானமாக ஆடி, ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் 39 ரன்களில் கேட்ச் ஆனதை தொடர்ந்து, அடுத்து வந்த சர்பராஸ் கான் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதத்தை நெருங்கிய ரோவ்மான் போவெல், 43 ரன்களில் போல்ட் ஆனார்.
இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 160 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது.