2013-ம் ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் கழித்து, காங்கிரஸ் கட்சி தனது சிந்தனை அமர்வு கூட்டத்தைக் கடந்த வாரம் மூன்று நாள்கள் ராஜஸ்தானில் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட ராகுல் காந்தியின் கருத்து, நாடு முழுவதும் விவாதப் பொருளானது. இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதலமைச்சரும், பா.ஜ.க-வின் தேசிய துணைத் தலைவருமான ராமன் சிங், காங்கிரஸையும், ராகுல் காந்தியையும் விமர்சித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற பா.ஜ.க தேசிய நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமன் சிங், “எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, 2013-ல் காங்கிரஸ் சிந்தனை அமர்வுக் கூட்டத்தை நடத்தியபோது, 13 மாநிலங்களில் அவர்கள் ஆட்சியிலிருந்தனர். தற்போது 2022-ல் சிந்தனை அமர்வுக் கூட்டம் நடந்தது. ஆனால், இரண்டு மாநிலங்களில் மட்டுமே அவர்கள் ஆட்சியில் உள்ளனர்.
இந்தச் சிந்தனை அமர்வுக் கூட்டத்துக்குப் பிறகு எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருக்காது என்று நான் நினைக்கிறேன். காங்கிரஸின் கொள்கை மற்றும் சிந்தனையின்படி, இது சிந்தனை அமர்வுக் கூட்டமல்ல, கவலை முகாம். அவர்கள் ஒருவரை கேப்டனாக்க நினைக்கிறார்கள். அவருக்கோ கேப்டனாக விருப்பமில்லை. அதிலும் விளையாடாத கேப்டனாக இருக்க அவர் தயாராக இல்லை. ராகுல் காந்தி இன்னும் விக்கெட்டும் எடுக்கவில்லை, ரன்னும் அடிக்கவில்லை” எனக் கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய ராமன் சிங், “அவர்களைப் பொறுத்தவரையில், கட்சி என்பது மூன்று பேருக்கு மட்டுமே. அதற்குமேல் அவர்களால் சிந்திக்க முடியாது. மக்களின் நம்பிக்கையைக் கட்சி இழந்துவிட்டது. நீண்டகாலமாக நாட்டு மக்களை அவர்கள் கொள்ளையடித்தனர். இனி அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது” என்று கூறினார்.