“காந்தியம், கம்யூனிசம், திராவிட மாடல்… மூன்றும் ஒரே ராணுவத்தின் 3 படைகள்” – பீட்டர் அல்போன்ஸ்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் 12வது மாநில மாநாடு 3 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாள் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமசந்திரன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமசந்திரன்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “விலைவாசி உயர்வை கண்டித்து வரும் 25-ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரை இடதுசாரி கட்சிகள் சார்பில் நாடு தழுவிய கண்டன இயக்கம் நடைபெறும். போராட்டத்தை பற்றி மத்திய அரசு சிறிதும் கவலைப்படாமல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி அறிவித்திருப்பது மிக கடுமையான கண்டனத்துக்குரியது. இது ஜனநாயக நாடு தானா? என்று கேட்கக் கூடிய அளவிற்கு உள்ளது. ஆகவே, மத்திய அரசு எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். தொடரும் விலைவாசி உயர்வு பாஜக அரசின் அகங்காரத்தை காட்டுகிறது. இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். தமிழகம் முழுவதும் 26, 27 தேதிகளில் இடதுசாரி கட்சிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மாநில அரசின் தீர்மானங்களை ஆளுநர் மதிக்கவில்லை. அதுதான் இங்கு முக்கிய பிரச்னை. இதை நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இந்த பிரச்னையை திசைத்திருப்பும் முயற்சியாக பாஜக அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். தண்டனை காலத்திற்கும் அதிகமாக சிறையில் இருப்பவர் என்ற மனிதாபிமான அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழக அரசும் மற்றும் பேரறிவாளன் குடும்பமும் சட்ட ரீதியாக மேற்கொண்ட முயற்சிகளே காரணம்.

மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்

விசாரணை இல்லாமல் பல ஆண்டுகளாக கைதிகளாக இருக்கும் இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். கர்நாடக மாநிலத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அங்கமான பா.ஜ.க.,பெரியார், பகத்சிங், சமூக சேவகர் நாராயணகுரு குறித்த பள்ளிப்பாடங்களை எடுத்து விட்டு அதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் வரலாறு குறித்த பாடங்களை இணைக்க ஏற்பாடு செய்துள்ளது. இது எதிர்காலத்தில் நிறைவேறவும் வாய்ப்புள்ளது.

ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் எந்த தர்ம நியாயங்களையும் எதிர்பார்க்க முடியாது. இவர்கள் வருங்காலத்தில் காந்தி குறித்த பாடத்தையும் எடுத்து விடுவார்கள். உக்ரைனில் இருந்து அழைத்து வரப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் அனைவரையும் அந்தந்த மாநிலங்களில் கல்லூரியில் சேர்ந்து அவர்களது மருத்துவப்படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் நிலவி வரும் பொருளாதார பிரச்னையை காரணம் காட்டி கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. கச்சத்தீவு மீட்கபட வேண்டிய ஒன்று. இதில் மாறுபட்ட கருத்து இல்லை. அதற்கான நேரம் எது என்பது குறித்து அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

மாநாட்டில் பீட்டர் அல்போன்ஸ்

தொடர்ந்து, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “காந்தியமாக இருந்தாலும் சரி, கம்யூனிசமாக இருந்தாலும் சரி, திராவிட மாடல் ஆட்சியாக இருந்தாலும் சரி மூன்றும் ஒரே ராணுவத்தில் பணியாற்றும் மூன்று வகைப் படைகள். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய வகுப்புவாத அரசியலை வீழ்த்துவதற்காக காந்தியம், ஆரியம், திராவிடம் ஒன்றாக அணிவகுத்து நின்று மாபெரும் வெற்றியை சாத்தியமாக்க வேண்டும்.

அதற்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களுடைய உதவி தேவை. தமிழ்நாட்டையும் இந்தியாவையும் வகுப்புவாத செயல்களிலிருந்து காப்பாற்றுவதற்கான பணிகளை வேகப்படுத்த வேண்டும். புதிய யுக்திகளை கண்டுபிடித்து வகுப்புவாத அரசியலுடைய விஷத்தை முறியடிக்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.