ஒவ்வொரு முறை விக்டோரியா சாலையைக் கடக்கும்போதும் உயர்ந்து நிற்கும் அந்த கேலரிகளும் டவர் லைட்களும் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் என்கிற அந்த பெயர் பலகையும் ஒருவித பிரமிப்பையே கொடுக்கும். இந்த மைதானம் சார்ந்து எத்தனையோ நினைவுகள் மூளைக்குள் ரீவைண்ட் ஆகி ஓடிக்கொண்டே இருக்கும்.
அந்த நினைவலைகளில் இந்திய முகங்கள் மட்டுமில்லை. அந்நிய நாட்டைச் சார்ந்த பல முகங்களுக்குமே அழிக்க முடியாத ஒரு தனி இடம் இருக்கிறது. அதில் மிக முக்கியமானவர் சயீத் அன்வர். சேப்பாக்கத்தின் மீதான பூரிப்பையையும் காதலையும் இன்னும் ஒரு படி அதிகப்படுத்தியதில் பாகிஸ்தானின் சயீத் அன்வர் பிரதானமானவர்.
மே 21, 1997 மற்றவர்களுக்கு சுவாரஸ்யங்கள் எதுவுமற்ற சாதாரண புதன்கிழமை அது. ஆனால், கிரிக்கெட் ரசிகர்களுக்கோ அது ஒரு திருவிழா தினம். இந்தியா vs பாகிஸ்தான் மோதும் போட்டி நடைபெறும் நாள் அது. போட்டி நடைபெறும் இடம் சென்னை சேப்பாக்கம். கொண்டாடி களிக்க வேறென்ன காரணம் வேண்டியிருக்கிறது? இந்திய தேசம் சுதந்திரமடைந்து 50வது ஆண்டை எட்டியதைச் சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொடர் அது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகள் இந்தத் தொடரில் ஆடியிருந்தன. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை வென்ற இந்தியா, ஜெயசூரியாவின் பட்டாசான இன்னிங்ஸால் இலங்கைக்கு எதிரான போட்டியை தோற்றிருக்கும். பெஸ்ட் ஆப் 3 முறையில் நடக்கவிருந்த இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற வேண்டுமெனில் பாகிஸ்தானுக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடக்கும் அந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும். இல்லையேல் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்லவே முடியாது.
இந்தியாவின் 50வது சுதந்திர தினத்திற்கான தொடரில் இந்தியா இறுதிப்போட்டியில் ஆட முடியாமல் போனால் எப்படியிருக்கும்? அதுவும் பாகிஸ்தானுக்கு எதிராக தோற்று? கற்பனையே செய்து பார்க்க முடியவில்லையா? ஆனால், அதுதான் நடந்தது. இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்லவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோற்றுப்போனது. இப்படிச் சொல்வதை விட சயீத் அன்வர் இந்தியாவைத் தோற்கடித்தார். சயீத் அன்வர் இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பைத் தட்டிப்பறித்துவிட்டார் என்று சொன்னால் சரியாக இருக்கும். பில்டப்பிற்காக அதிகப்படுத்தியெல்லாம் சொல்லவில்லை. நிஜமாகவே அதுதான் நடந்தது. எந்தச் சுவாரஸ்யமுமற்ற அந்தப் புதன்கிழமை இன்னும் ஞாபகத்தில் நிற்பதற்கு சயீத் அன்வர் அடித்த அடிதான் காரணம். பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.
சயீத் அன்வர் மட்டும் 194 ரன்களை அடித்திருந்தார். பாகிஸ்தான் 327 ரன்களை எடுத்தது. இந்தியா 328 ரன்களை எடுக்க முடியாமல் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
சயீத் அன்வர் ஈவு இரக்கமின்றி அடித்து வெளுத்திருந்தார். குருவில்லாவின் பந்தில் இன்னொரு ஓப்பனரான அஃப்ரிடி இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆகியிருப்பார். சேப்பாக்கம் மொத்தமுமே அதிர்ந்தது. பாகிஸ்தானின் வீழ்ச்சியை குருவில்லா ரெட் ரிப்பன் வெட்டி தொடங்கியதாகவே ரசிகர்கள் கருதினர். ஆனால், அஃப்ரிடி விக்கெட்டுக்கு எழுந்த ஆர்ப்பரிப்புதான் இந்திய ரசிகர்களின் கடைசி ஆர்ப்பரிப்பாக இருந்தது. அந்த முதல் 2 ஓவர்களுக்கு பிறகு சயீத் அன்வர் ஆட்டம் மொத்தத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். ஜவஹல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், அனில் கும்ப்ளே, ஜோஷி என யார் வீசினாலும் சயீத் அன்வரிடமிருந்து ஒரே பதில்தான். அது அதிரடி மட்டுமே.
14வது ஓவரில் பாகிஸ்தான் 75 ரன்களை எட்டும்போதே அன்வர் அரைசதத்தைக் கடந்திருப்பார். 27வது ஓவரில் அணியின் ஸ்கோர் 143 ஆக இருந்த போதே சதத்தையும் நிறைவு செய்தார்.
மயான அமைதியாக இருந்த சென்னை கூட்டமே ஒரு கட்டத்தில் தங்களின் பக்குவத்தை வெளிக்காட்டத் தொடங்கினர். அன்வருக்காகவும் ஆர்ப்பரித்தனர். பாயின்ட்டில் கட் செய்தும் ஸ்கொயர் லெகில் மடக்கியும் அன்வர் அடித்த ஒவ்வொரு பவுண்டரியும் க்ளாஸ் தாண்டவமாக இருந்தது. எல்லோருடைய ஓவரையுமே அன்வர் அடித்திருந்தாலும் அனில் கும்ப்ளேவின் ஓவர்களில் கொஞ்சம் கூடுதலாகவே அதகளப்படுத்தினார்.
கும்ப்ளே வீசிய 41வது ஓவரில் மட்டும் 24 ரன்களை அடித்து சிதறவிட்டார். ஹாட்ரிக் சிக்ஸர்களையும் பவுண்டரியையும் அடித்து அனில் கும்ப்ளேவை நொந்து போய் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டிருப்பார்.
அனில் கும்ப்ளே மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய அணியுமே அன்று மன உளைச்சலின் உச்சத்திற்கேதான் சென்றிருந்தது. சதத்தைக் கடந்தும் அன்வர் நிற்காமல் வெளிப்படுத்திய அதிரடியில் பல ரெக்கார்டுகளும் உடைபடத் தொடங்கின.
ஓடிஐ போட்டிகளில் அதுவரை ஒரு தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்த 189-ஐ அன்வர் தாண்டினார். 190 ரன்களை எடுத்துவிட்டு அன்வர் பேட்டை உயர்த்தி காட்டியது சேப்பாக்க மைதானத்தின் கல்வெட்டில் பதிவான இன்னுமொரு அற்புதமான வரலாற்றுத் தருணம்.
இருநூற்றைத் தாண்டுவார், அதுவரை கிரிக்கெட் உலகம் கண்டிராத ஒரு சம்பவத்தை நிகழ்த்திக் காண்பிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த தறுவாயில் 194 ரன்களில் அவுட் ஆனார். மற்றவர்களுக்கு பந்தைக் கொடுத்து ஓய்ந்து போய், கேப்டனான தானே பந்து வீச வந்த சச்சின், அன்வரின் விக்கெட்டை வீழ்த்தினார். ஒட்டுமொத்த சேப்பாக்கமும் சயீத் அன்வருக்காக ஆர்ப்பரிப்பில் அதிர்ந்தது.
விவ் ரிச்சர்ட்ஸின் சாதனையை உடைத்திருக்கிறார் எனில், அது தரமான சம்பவம்தானே? விக்டோரியா ஹாஸ்டல் சாலையை கடக்கும்போது சச்சினை போல, தோனியை போல, சயீத் அன்வரும் நினைவுக்கு வருவதை எத்தனை காலமானாலும் தவிர்க்கவே முடியாது.