இந்தியாவில் பிரபலமில்லாத ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டியில் கோவையைச் சேர்ந்த மாணவனும், மாணவியும் சாதித்து வருகின்றனர். அவ்விருவரும் அர்ஜென்டினாவில் நடைபெறும் சர்வதேசப் போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளனர். யார் அவர்கள் ?
ஸ்கேட்டிங்… சக்கரம் பொருத்தப்பட்ட உபகரணத்தை கால்களில் கட்டிக் கொண்டு சாகசங்களை அரங்கேற்றும் விளையாட்டு இது. இந்த விளையாட்டில் ஏறக்குறைய 10 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் கரடு, முரடான பாதைகள், மலைப்பாங்கான இடங்களில் நடத்தப்படும் போட்டி ஆல்பைன்(ALPINE) ஸ்கேட்டிங்…. இத்தகைய ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டியில் சாதித்து வருகின்றனர் கோவை மாணவர்கள்.
கோவையை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் கௌதம் மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவி நவீனா ஆகியோர் ஸ்கேட்டிங் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பந்தய பாதையின் நடுவே வைக்கப்பட்டிருக்கும் தடைகளை கைகளால் தொட்டவாறு இலக்கை எட்டுகிறார்கள் இவர்கள்… மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை அள்ளியிருக்கின்றனர் இவர்கள். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்கேட்டிங் பயிற்சி செய்து வருகிறார்கள்.
இதன் எதிரொலியாக அக்டோபர் மாதம் அர்ஜென்டினாவில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்கும் நால்வரில் இருவராக மிளிர்கின்றனர். மேம்படுத்தப்பட்ட பயிற்சிக் களங்கள் கிடையாது. சிறு மலைப்பகுதிகள், பாலங்கள் என இவர்கள் பயிற்சியெடுக்கும் இடங்களே இவர்களது ஆர்வத்துக்கு சாட்சிக்களங்கள்.
தரமான பயிற்சிக்களங்களை ஏற்படுத்த மத்திய-மாநில அரசுகள் முன்வந்தால், இந்த விளையாட்டில் மேலும் பலர் சாதிப்பார்கள் என நம்பிக்கை தெரிவிக்கிறார் பயிற்சியாளர் கனிஷ்க்… தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை வசப்படுத்தி பதக்கங்களை கைப்பற்றி வரும் தங்களுக்கு அரசு தரப்பில் உதவிகள் கிட்டினால் சர்வதேச அளவில் பல பதக்கங்களை பெற ஊக்கமாக இருக்கும் என்கிறார் ஆல்ஃபைன் ஸ்கேட்டிங் வீரர் கௌதம்.
பல்வேறு சவால்களைக் கடந்து தேசிய அளவில் சாதித்து வரும் தமக்கு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே இலக்கு என்கிறார் இளம் வீராங்கனையான நவீனா. கிரிக்கெட் மட்டும் விளையாட்டல்ல, என்பதை உணர்த்தும் வகையில் பிற விளையாட்டுகளிலும் இளம் வீரர்-வீராங்கனைகள் ஆர்வம் செலுத்தி வருவது விளையாட்டுத்துறைக்கு ஆரோக்யமான அம்சம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM