சென்னை:
சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து அனைத்து அலுவலர்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:
முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இதுவரையில் கோயில் திருப்பணிகள் மற்றும் இதர பணிகளுக்காக ரூபாய் 666 கோடி மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இந்த ஆண்டு சுமார் 2417 திருக்கோயில்களில் சுமார் 1301.29 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கிராமப்புற ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் இருக்கின்ற திருக்கோயில்களுக்கு 129.59 கோடியை ஒதுக்கீடு செய்தது.
இந்த ஆண்டு கூடுதலாக ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 2000 திருக்கோயில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 40 கோடி ரூபாய் அரசின் மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 தேவஸ்தான திருக்கோயிலின் நிர்வாக மற்றும் பராமரிப்பு செலவிற்க்காக ரூபாய் 3 கோடியிலிருந்து 6 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டது.
அதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 225 திருக்கோயில்களுக்கு
ரூபாய் 1 கோடியிலிருந்து 3 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு 7 உயர் நிலை இராஜகோபுரங்கள் கட்டுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
120 திருக்கோயில்களிலே பசுமடங்கள் உள்ளன. அதில் பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள திருக்கோயில்களுக்கு பக்தர்கள் பசுக்களை நேற்றிக் கடனாக கொடுக்கின்றன.
அந்த பசுக்களை பராமரிப்பதற்காக சென்னை ஆவடியில் பசு மடம் அமைப்பது தொடர்பாகவும், திருச்சி, திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பசு மடம் அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பதினெண் சித்தர்களோடு தொடர்புடைய திருக்கோயில்களில் சித்தர்களுக்கு ஆண்டுதோறும் விழா எடுக்கப்படும்.
முதற்கட்டமாக திருவாரூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலில் கமலமுனி சித்தர், சங்கரன்கோயில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் பாம்பாட்டி சித்தர், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சுந்தரானந்த சித்தர் , ஆகிய மூவருக்கும் திருக்கோயில்களின் சார்பில் விழா எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப் பட்டுள்ளது.
திருக்கோயில்களில் திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் நடைபெற்று வந்த ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மீண்டும் முதற் கட்டமாக 48 முதுநிலைத் திருக்கோயில்களில் சிறப்பாக நடத்தப்படுவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பெரிபாளையம், அருள்மிகு பவாணி அம்மன் திருக்கோயில், புரசைவாக்கம் அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில், நங்கநல்லூர் ஆஞ்சிநேயர் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோயில்களில் தங்கத்தேர்களும், திருத்தனி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருக்கருகாவூர் அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோயில்களில் வெள்ளித்தேர் செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் தொடர்பாக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .
சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் கணகசபை மீது ஏறி ஆண்டாண்டு காலாமாக பக்தர்கள் தரிசனம் செய்து வந்த சூழ்நிலை மீண்டும் உருவாக்கப்பட்டு பக்தர்கள் மகிழ்ச்சியாக தரிசனம் செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே நடக்கும் பிரச்சனை நீதிமன்ற உத்தரவின்படி செயல்படுத்தப்படும்.
கடந்த ஆண்டு மீட்கப்பட்ட திருக்கோயில் நிலங்களைப் பற்றியை புத்தகம் வெளியிட்டதைப் போல் இந்த ஆண்டும் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து அதிக அளவில் நிலங்கள் மீட்க்கப்பட்டு புத்தகம் வெளியிடப்பட உள்ளது.
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும்அதை படிக்கட்டுளாக மாற்றி அதில் பயணம் செய்து கொண்டிருப்போம்.
தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயிலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள இடங்கள் போக மற்ற நிலங்கள், மனைகள், கட்டிடங்கள், வாடகைக்கு விடப்பட்டு திருக்கோயில்களுக்கு வருவாய் பெருக்குகின்ற வகையில் திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் இரா.கண்ணன், ந.திருமகள், சி.ஹரிப்ரியா மற்றும் அனைத்து மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்…வனப்பகுதியை 33 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்