சீன ஆக்ரமிப்பு குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை- காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி:
எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரியின் மீது சீனா இரண்டாவது பாலத்தை கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகின.  
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மௌனம் காப்பது ஏன் என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 
சீன ஆக்ரமிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி வெளிப்படையாக பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. 
சீனாவால் கட்டப்பட்ட இரண்டு பாலங்களும் 1960 ஆண்டு சட்ட விரோதமாக சீனா ஆக்ரமிப்பு செய்த பகுதியில் பல வருடங்களாக உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்  அரிந்தம் பாக்சி நேற்று விளக்கம் அளித்திருந்தார்.
மத்திய அரசின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சி பதில் அளித்துள்ளது. சீனா உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே கட்டுமானப் பணிகளை  மேற்கொள்வதைப் பற்றி பாஜக தலைமையிலான மத்திய அரசு கவலைப்படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
எல்லையில் சீனா கிராமங்கள் மற்றும் சாலைகளை அமைத்து வருவது குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு காங்கிரஸ் கொண்டு சென்றதாகவும், ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல், மக்களையும் இளைஞர்களையும் தவறாக வழிநடத்தி இந்த விவகாரத்தில் பொய் பேசுவதாகவும் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் அவர்கள் தவறிழைத்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
வேலை வாய்ப்பு குறைந்துள்ள நிலையில்,  மக்களின் வாழ்க்கைத் தரத்தை எப்படி மேம்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர்,
காங்கிரஸ் ஆட்சியின்போது 27 கோடி மக்களை வறுமையிலிருந்து இருந்து மீட்டதாகவும், ஆனால் பிரதமர் மோடியின் ஆட்சியில் 
23 கோடி மக்களை வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளியது என்றும்,  மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டி உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.