ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் சுரங்கப்பாதை விபத்தில், 36 மணி நேர மீட்புப் பணிக்கு பிறகு 10 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் ராம்பன் மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் கோனி நல்லா என்ற இடத்தில் சுரங்கப்பாதை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இங்கு கட்டுமான பணி நடந்து வரும் நிலையில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) இரவு ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக சுரங்கப்பாதையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் கட்டுமான பணியில் இருந்த தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வந்தது. விபத்து நடந்த உடனே மீட்பு பணிகள் தொடங்கப்பட்டாலும் மீண்டும் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) நிலச்சரிவு ஏற்பட, மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
எனினும், தொடர்ந்து நடந்துவந்த தற்போது வரை சுமார் 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இறந்த இந்த 10 பேரில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 5 பேர், நேபாளத்தைச் சேர்ந்த இருவர், அசாமில் ஒருவர், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் இருவர் அடங்குவர்.
பெரிய நிலச்சரிவு என்பதால் சுரங்கப்பாதை சுற்றிலும் இடிபாடுகளில் சிக்கியது. அப்போதே, அதில் சிக்கியிருப்பவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என சொல்லப்பட்டது. சர்லா என்ற நிறுவனத்தைச் சார்ந்த சுமார் 12க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அதில் நேற்றே மூன்றுபேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இதனிடையே, இறந்த 10 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.16 லட்சம் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனக் குறைவுடன் இருந்ததே காரணமாக சொல்லப்படுகிறது. தொழிலாளர்கள் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கும் முன்பே சரியான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்று விபத்தை ஆராய்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கவனக்குறைவை அடுத்து அலட்சிய பிரிவில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.