சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் தேசிய முதியோர் நல மருத்துவமனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரே நேரத்தில் 1000 காலி பணியிடங்களுக்கு கலந்தாய்வு வருகிற 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடக்கிறது. மருத்துவ கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடங்களுக்கு முடிந்த பிறகு பொது சுகாதாரத்துறை, மாநில மருத்துவ பணிகள் இயக்கத்துக்குட்பட்ட காலி இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
கிராம செவிலியர், பகுதிசெவிலியர், சமுதாய செவிலியர், சுகாதார ஆய்வாளர் என மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு பணி மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடைபெறும். இந்த கலந்தாய்வு ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும்.
இடமாறுதலுக்காக யாருடைய பரிந்துரையையும் தேடிச்செல்ல வேண்டாம். விரும்புகிற இடங்களை தேர்வு செய்யலாம். மொத்தம் 13 ஆயிரம் பேர் இதன் மூலம் பயன் பெறுவார்கள்.
முதல் முறையாக ஒரே நேரத்தில் ஆயிரம் பணியிடங்களை நிரப்புவது இதுவே முதல் முறை.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாவலூரில் ஒரு குடும்பத்தில் உள்ள 2 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது அதில் ஒருவருக்கு ஒமைக்ரான் பிஏ4 என்ற புதிய வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் தற்போது நலமுடன் இருக்கிறார்கள். அவர்களுடைய தொடர்பில் இருந்தவர்களை சோதனை செய்ததில் யாருக்கும் எந்தத் தொற்றும் இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட இருவரும் குணம் அடைந்து விட்டனர்.
மேலும் வரும் 12-ந் தேதி 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவர்களுக்கு மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.