தமிழகத்தில் 5 ரயில் நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படும் – சென்னையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

சென்னை: தமிழகத்தில் சென்னை எழும்பூர், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 ரயில் நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

பயணிகள் ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக 2019-ல் `வந்தே பாரத்’ என்ற அதிவேக ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது டெல்லி-வாரணாசி மற்றும் டெல்லி-காத்ரா இடையே 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில்களுக்கான பெட்டிகள் சென்னை, பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இதில் 2 பெட்டிகள், வரும் ஆகஸ்ட் மாதம் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதேபோல, 75 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், ஐசிஎஃப் தொழிற்சாலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று, வந்தே பாரத் ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறந்த பயண அனுபவம், மேம்பட்ட பாதுகாப்பு, அதிக பயணிகள் செல்லும் வசதி போன்றவற்றில் இந்திய ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது.

இதற்காக, அனைத்து ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக 50 ரயில் நிலையங்கள் சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்பட உள்ளன. தமிழகத்தில் சென்னை எழும்பூர், மதுரை, கன்னியாகுமரி, ராமேசுவரம் மற்றும் காட்பாடி ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.3,685 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே தனியார்மயமாக்கப்படாது.

இந்திய ரயில்வேயில் `கவச்’ என்ற ரயில் பாதுகாப்புக் கருவி மற்றும் நவீனத் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். ரயில் தடத்தின் தரம், பாதுகாப்பு மற்றும் பாலங்களின் நிலை ஆகிய அனைத்தும் மேம்படுத்தப்படும். ரயில்களில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்காக, ரயில் தண்டவாளங்கள் உயர்த்தப்படுவதுடன், யானைகள் செல்வதற்கு சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும்.

`வந்தே பாரத்’ ரயில் சக்கரங்கள் உக்ரைன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த சக்கரங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழ் கற்க அறிவுறுத்தல்

தமிழகத்தில் பணியாற்றும் அனைத்து ரயில்வே ஊழியர்களும் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும். இது பயணிகளுடனான உறவையும், ரயில் இயக்கத்தின் மேம்பாட்டையும் உறுதி செய்யும். இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

தொடர்ந்து, ஐசிஎஃப்-ல் தயாரான 12,000-வது எல்எச்பி ரயில் பெட்டியையும் அமைச்சர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஐசிஎஃப் பொது மேலாளர் ஏ.கே. அகர்வால், தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி. ஜி. மல்லையா, ஐசிஎஃப் தலைமை இயந்திரவியல் பொறியாளர் எஸ். ஸ்ரீனிவாஸ் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.