திருப்பதி ஏழுமலை யான் கோவிலில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்தர்களுக்கு திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரிடையாக வழங்கப்பட்டு வந்தது. பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் நேரடி இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டது.
தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பக்தர்கள் காத்திருக்கும் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
பக்தர்கள் சுமார் 8 முதல் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்வதற்காக விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது ரூ.300 கட்டண சிறப்பு தரிசனத்தில் தினமும் 25 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் என 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் இன்று காலை 9 மணிக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
மொத்தம் 61 நாட்களுக்கு 15.25 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 1மணிநேரத்தில் 15 லட்சம் டிக்கெட்டுகளை பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர்.
திருப்பதியில் நேற்று 71,119 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 37,256 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.91 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.