தேசிய பங்குச் சந்தை மோசடி; 10 இடங்களில் சி.பி.ஐ., சோதனை| Dinamalar

புதுடில்லி : என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தையில் நடந்துள்ள மோசடிகள் தொடர்பாக, டில்லி மும்பை உட்பட, 10க்கும் மேற்பட்ட இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா மீது பல மோசடி புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இது தொடர்பாக, ‘செபி’ எனப்படும் இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணை நடத்தியது.இதில், ஆனந்த் சுப்ரமணியம் என்பவரை சித்ரா ராமகிருஷ்ணா தனக்கு ஆலோசகராக நியமித்ததில் முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது. மேலும், அவருக்கு அதிக சம்பளம், பதவி உயர்வு, பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இமயமலையில் உள்ள ஒரு யோகியின் உத்தரவின்படியே, இந்த சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மும்பையில் என்.எஸ்.இ., அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் தகவல்களை சேமிக்கும், ‘சர்வர்’ அமைப்பை தனியார் பங்குச் சந்தை தரகு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதன் வாயிலாக, பங்குச் சந்தை நிலவரம் தொடர்பாக முதலில் அவர்களுக்கு தகவல் கிடைத்து வந்தது. இதில் பல மோசடிகள் நடந்ததாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துஉள்ளது.இந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியம் உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சர்வரை பகிர்ந்து கொண்டதன் வாயிலாக மோசடிகளில் ஈடுபட்ட பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள் மற்றும் செபி அதிகாரிகளுக்கு சொந்தமான, 10க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.மும்பை, டில்லி, காந்தி நகர், கோல்கட்டா, நொய்டா உட்பட பல இடங்களில் இந்த சோதனை நடந்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.