திருவனந்தபுரம்: புதுமுக நடிகை பலாத்கார வழக்கில் தலைமறைவாக உள்ள நடிகர் விஜய் பாபுவை கைது செய்ய உதவுமாறு கூறி, பல்வேறு நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களுக்கு கொச்சி போலீஸ் கடிதம் அனுப்பியுள்ளது. மலையாள புதுமுக நடிகையை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபுவை கைது செய்ய கொச்சி போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனே அவர் துபாய்க்கு தப்பித்து சென்றார். விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி கொச்சி போலீசார் அவருக்கு பலமுறை இமெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.அவர் ஜார்ஜியா தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் தப்பித்துச் சென்றது ஜார்ஜியா நாட்டுக்கா அல்லது அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா மாகாணத்திற்கா என்று இது வரை உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், விஜய் பாபுவை கைது செய்ய வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாட கொச்சி போலீசார் தீர்மானித்துள்ளனர். விஜய் பாபுவின் பயண விவரங்கள் குறித்த விவரங்களை தருமாறு கூறி பல்வேறு நாட்டு தூதரகங்களுக்கு கொச்சி போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜு கூறும்போது, ‘நடிகர் விஜய் பாபு சட்டத்தை மதிக்க வேண்டும். அவர் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்யப்படுவது உறுதி. இதுதொடர்பாக மிக தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார். இதற்கிடையே விஜய் பாபு கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.