நாடோடிச் சித்திரங்கள்: மழை நிமித்தம்… வனத்தின் ஆண் வாசம் | பகுதி 35

கேதுரு மரங்களைக் குறித்த அறிமுகம் உலகிற்கு புதிதாக தேவையில்லைதான் என்றாலும் கார்கால நாட்களில் அவற்றின் திசுக்களிலிருந்து துளிர்த்து வனமெங்கும் பரவும் நறுமணம் பற்றி என்னால் மட்டுமே கூற இயலுமென்று தோன்றுகிறது. ஒரு வேளை எனக்கு முன்பே யாரும் உங்களிடத்தில் அந்நறுமணத்தைப் பற்றி கூறியிருந்தால் அவர்களும் நானே என்று அறிவீர்களாக.கேதுரு மரத்தின் உச்சிக் கிளைகள் மேகங்களைத் தீண்டி மகிழும் நாளில் மழைகாலம் துவங்குவதாக இமயமலைப் பகுதி மக்கள் கூறுவர். மழை நனைத்த வனமானது பூசிக் கொள்ளும் வாசத்தை நுகர்ந்துத் திளைக்கும் வேட்கை இக்காலத்தில் மனதில் எழும்புவது வாடிக்கையாகிவிட்டது.

கேதுரு மரத்தின் உடற்வாசத்திற்கு என்னுடலின் ஐம்புலன்களும் விழித்துக் கொண்டு களிப்புறும். மரங்களை ஆறத்தழுவிக் கொள்ளும் பழக்கத்தையும் கேதுரு மரத்தின் வாசமே என்னுள் விதைத்ததெனலாம்.

ஒரு மழைநாளில் அது நிகழ்ந்தது. வானம் ஒரு தவணை மழையைப் பொழிந்து ஓய்ந்திருந்தது. அங்கிருந்த ஒரு கல்லறைப் பலகையின் மறைவில் உடலின் ஈரம் உலர்த்தினேன். மண்ணுக்குள் புதைந்திருந்த ஏதாவதொரு ஆணுடல் என்னைக் கண்டதும் உயிர்பெற்று எழும்புவிடுமோ என்கிற குழந்தைத் தனமான தவிப்பை இரசித்தபடியே வேகமாக ஆடையெனும் பொய்யைத் தரித்துக் கொண்டேன். இன்று வரை என்னால் சொற்களுக்குள் அடக்கிக் கொணர முடியாது போன ஒரு உணர்வை அன்று முதன்முதலில் உணர்ந்தேன். காற்றில் ஒரு வாசம், அது நிச்சயம் எந்த மலரினுடையதுமாயிருக்க முடியாது என்று தோன்றியது.

மலரின் வாசத்தில் நோக்கமிருக்கும். கவர்ந்திழுக்கும் நோக்கம். ஆனால் அங்கு படர்ந்த நறுமணம் அப்படியிருக்கவில்லை, எதற்கும் யாருக்கும் அழைப்பு விடுக்காமல் அதே சமயம் வனத்தின் முழுமையையும் தன் வாசக் கயிற்றால் பிணைத்தது போன்றதொரு மகத்துவம். அதிலும் குறிப்பாக ஒரு கேதுரு மரம் மற்றவற்றை விட தனித்து நின்றது. பிரம்மாண்டமான அதன் முழுமையைக் காண முயன்றால் பூமியிலிருந்து வானம் வரை கழுத்து குனிந்து நிமிர்வது ஒவ்வொரு முறையும் நிகழும். அதன் முழுமையை நான் வியக்கும் போதெல்லாம் ஒரு சொட்டு நறுமணத்தைக் கூட்டி வனமுழுதும் படர விட்டது அம்மரம்.

நாடோடிச் சித்திரங்கள்

மழையின் கொடையாக அம்மரத்தின் வேர்க் கால்களை அலங்கரித்திருந்தன மஞ்சளும் சிவப்பும் நீலமுமாக முளைத்திருந்த மழைக் காளான்கள். இளமையின் வனப்பும் கவர்ச்சியும் நிரம்பிருந்தன அவற்றின் தோற்றத்தில். மீண்டும் பூமியிலிருந்து வானம் வரை நீண்டிருந்த மரத்தை வியந்தபடியே அதனருகில் சென்றேன். தன் நறுமணக் கைகள் நீட்டி என்னை அந்த மரம்தான் முதலில் தழுவிக் கொண்டது.

நெடுநேரமாகியும் அப்படியே நின்றுக் கொண்டிருந்தோம் இருவரும். கலவியினிடையே காதலியின் முகம் காண விழைந்து சற்றே அவளை தன்னிடமிருந்து விலக்கி வைத்துப் பார்க்கும் காதலன் போல் அம்மரம் என்னை அசைத்தது.

“நீ மீண்டும் இங்கு வருவாய், அவன் உன்னை அழைத்து வருவான், அன்றும் இதே போல் மழை நாளாக இருக்கும். காற்றெங்கும் என் வாசமும், வண்ணமயமான மழைக்காளான்களின் மெத்தை விரிப்பும், அதோ அந்தக் கல்லறை மறைவில் உன் நிர்வாணமும், அனைத்தும் மீண்டும் நிகழும். அவனோடு நீ இங்கு வா அதற்காகத்தான் உன்னை இப்பொழுது விடுவிக்கிறேன்” என்றது கேதுரு மரம்.

“அவனா? யார் அவன்? மீண்டும் ஒரு ஆணா? ஆண்களற்ற ஒரு வாழ்வு சாத்தியமில்லையா? ஆணினம் புதுமைகளற்றது, ஆச்சரியங்களற்றது, நிறங்களற்றது, நுணுக்கங்களற்றது” என்றேன். காற்றில் வாசம் ஒரு துளி மிகுந்தது. என்னை வழியனுப்பி வைத்தது அம்மரம்.

மணியோசை என்றால் இப்படி கற்பனை செய்து கொள்ளலாம். ஒரு முறை மட்டுமே அடித்ததில் ஒலிக்கத் துவங்கிய மணியின் ஓசை மலைகளின் மதில்களிலெல்லாம் மோதி எதிரொலித்துக் கொண்டே இருந்தது. எதிரொலிதான் என்றாலும் அவையெல்லாம் ஒரே ஒலியின் நீட்சியாக இருந்தது. ஏதோ ஒரு இதயத்தின் நேர்மையான வேண்டுதலிலிருந்து எழும்பிய ஓசையானது மலை முழுதும் மோதி எதிரொலிப்பது போலிருந்தது. அவ்வொலி ஓயுமென்று மனம் காத்திருந்தது. அது முடிவடையாது எதிரொலித்துக் கொண்டிருக்கவும் ஒரு புள்ளியில் மனதின் முகடுகளிலும் அவ்வொலியானது மோதி அகத்தினுள்ளும் ஒலிக்கத் துவங்கியது. அதுவரை புறவயமான ஒரு நிகழ்வாக இருந்தது இப்பொழுது எனது இயக்கத்தினுள்ளும் ஊடுருவியிருந்ததை உணர முடிந்தது. நிலைமை சீரானது. மணியோசை எதிரொலித்தபடி இருந்தது.

இதற்கு முன்னமே சில முறை நான் அவ்விடத்திற்கு சென்றிருந்தாலும் முந்தைய அனுபவங்களின் சாயல்களையெல்லாம் மழை வந்து அழித்திருந்தது. ஒவ்வொரு முறையும் எனக்கு முதல் முறையாகவே இருந்தது. கேதுரு மரத்தின் அசரீரி மனதின் ஒரு ஓரத்தில் ஒலித்தபடி இருந்தது. அதற்கு செவி சாய்க்காமல் முன்னேறினேன். “அவன் அழைத்து வருவான், அவனை நீ அழைத்து வருவாய்”, இவ்விரண்டுமே நிகழக்கூடாதென மனம் நிச்சயித்துக் கொண்டது. ஆண்கள் திசைகளற்றவர்கள், அவர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள ஏதுமில்லை. இட்டு நிரப்ப வேண்டிய உடற்கலன்கள் அவர்கள்.

ஆண்களின் மனதில் ஒரு அறை மட்டுமே உண்டு.தேடிக் கண்டடைய ஆச்சரியங்கள் ஏதுமில்லாத சாம்பல் நிற அறை அது. அதனால் கேதுரு மரம் கூறியதை விரும்பி மறந்துவிட்டேன். வழி நெடுகிலும் பரிச்சயமில்லாத மனிதர்கள் மலையில் விளைந்த காய் கனிகளையும் மலர்ச் செடிகளையும் தேனடைப் தட்டுகளையும் செம்மறியாட்டுத் தோலில் செய்த ஆடைகளையும் விற்பனைக்கு வைத்துக் காத்திருந்தனர். அங்காடித் தெருவைக் கடந்து சென்றால் அடுத்த மலையின் ஏற்றம் துவங்கிவிடும். அம்மலை உச்சியில்தான் அனைத்து மதங்களும் சொந்தம் கொண்டாடும் பல்லாயிரமாண்டுகள் பழமையான கோவில் ஒன்று இருப்பதாகப் படித்தேன். அங்கு வாழும் மனிதர்கள் நம்மிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை வாழ்வதாகவும் மூப்பு, நோய், மரணம் இம்மூன்றையும் வெல்லும் யோகப் பயிற்சிகள் அறிந்தவர்கள் என்றும் உலகின் அனைத்து விதமான நோய்களுக்கும் அவர்கள் மருத்துவம் செய்து குணப்படுத்துவதாகவும் செய்தி உண்டு. அங்கு சென்று வர மனம் விழைந்தது.

தேநீர் அருந்தலாமென ஒரு கடைக்குள் நுழைந்தேன். அங்கிருந்து எதிரில் பெண்கள் கூட்டமொன்றின் நடுவில் கந்தர்வன் ஒருவன் அமர்ந்திருந்தான். ‘விலையுயர்ந்த ரத்தின அணிகலன்கள் விற்பனைக்கு’ என்று எழுதியிருந்த பலகை ஒன்று அவனருகே நின்றிருந்தது. “விலையுயரந்த கற்கள் விற்பவன் சாலையோரத்தில் கடைவிரிப்பானேன்” என்று பரிகாச தொனியில் தேநீர் கடைக்காரரிடம் வினவினேன். அவன் ராஜஸ்தான் பாலைவனங்களில் சுற்றித்திரியும் ஜிப்ஸி இனத்தவன். வருடத்திற்கொரு முறை மழைகாலம் துவங்கும் நேரத்தில் இங்கு வந்து விடுவான். அவனுடைய வசீகரத்திற்கு குமரிகளும் பேரிளம்பெண்களும் கிழவிகளும் கூட அவனிடம் மயங்கி ஏதாவதொரு கல்லை நிச்சயம் வாங்கிச் செல்வர்.

ஒவ்வொரு கல்லிற்கும் அவனிடம் நிச்சயம் ஒரு கதை இருக்கும். அவனது கருத்தும் கவனமும் அங்கு சுற்றி வந்த பெண்களிடமே நாட்டம் கொண்டிருந்தது. பெண்களுக்கு பொருத்தமான ஆணாக அவன் இருந்தான். உடல் முழுதும் வசீகரம், கண்களில் காமம், குரலில் மென்மை. இது போதுமென்று அனைத்து வயது பெண்களும் அவனைச்சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தனர். சிலருக்கு விரல் பிடித்து மோதிரம் அணிவித்தான், வேறு சிலருக்கு காது மடல் வருடி இரத்தினக் குழல்கள் அணிவித்தான், இன்னும் சிலருக்கோ அவர்களின் அனுமதியோடு கெண்டைக் கால் தாங்கிப் பிடித்து இரத்தினக் கொலுசு சூட்டிவிட்டான். அவனிடத்தில் என்ன மாயம் இருந்துவிடப்போகிறது என்று மனதிற்குள் நினைத்த மாத்திரத்தில் அத்தனைப் பெண்களும் ஒரே நேரத்தில் என்னைப் பார்த்து கேலி பேசுவது புரிந்தது. கந்தர்வனும் அவனது காதலிகளும் தங்கள் இருப்பின் வெறுமையை விரட்ட போராடுவது எனக்கு புரியாமலில்லை. “இதுதானே மனித இருப்பின் பொருள்” என்றார் தேநீர் கடைக்காரர். “இவ்வளவு மலிவான புரிதலா” என்றேன்.

“உங்களது பார்வை அது. மிக பெரும்பாலோனோருக்கு இதுவே போதுமானது. அது சரியானதும் கூட. எல்லாவற்றையும் வளைத்து நெளித்து ஆழமாக கிளறிப் பார்க்க வேண்டியதில்லை அல்லவா. உடலை உடலாக பார்ப்பதில் தவறென்ன இருக்கிறது” என்றார். அவர் கூறுவதிலிருந்து நான் முரண்படவில்லை. எனக்கு அவ்விளக்கம் பொருந்தவில்லை என்று பணிவாக அவரிடம் கூறினேன். ஏனோ அவ்விடத்தில் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை, தேநீரும் சுவைக்கவில்லை.

ஒரு முறை கந்தர்வனை திரும்பி பார்த்தேன். “உனது நெற்றிச் சுருக்கங்களை மறையச் செய்யும் மந்திரக்கல் ஒன்று என்னிடம் உண்டு. வா, தருகிறேன் என்றான்”. நான் வேகமாக அவ்விடம் விட்டகன்றேன். நான் மேலும் பயணிக்கத் தேவையான நியாயத்தை கந்தர்வன் செய்து கொடுத்தான்.

ஒருவழியாக நான் சென்றடைய வேண்டிய மடப்பள்ளி மலையின் உச்சத்தில் கம்பீரமாக நின்றிருந்தது. நோய் தீர்க்கும் மூலிகை மலை என்று அம்மலை அறியப்பட்டது. இத்தனை நோய்களா மனித இனத்தை பீடித்திருக்கின்றன என்று திகைத்துப் போகுமளவிற்கு அங்கு உலவிய ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான நோய். சிலருக்கு உடலை வருத்தும் நோய்கள், வேறு சிலருக்கு மனப் பிறழ்வு நோய்கள், இன்னும் சிலருக்கோ மரணத்தின் கதவுகள் திறக்காத வயோதிகமே நோயாகிப் போன நிலை. உடல் சிதையத் துவங்கிவிட்டபோதும் உயிர்ப்பறவை கூட்டைவிட்டு பறக்கத் துணியாத நோய்நிலை. இப்படி மழையிலும் குளிரிலும் தவிக்க விடப்பட்டிருந்த போதும் உயிரைப் பிரிய உடலும் உடலைப் பிரிய உயிரும் முடிவெடுத்தாலொழிய வேறெதனாலும் மரணத்தை நிகழ்த்த இயலாது என்கிற உண்மை விளங்கியத் தருணமது.

மடத்தை நான் அடைந்த நேரம் அந்தி சாய்ந்து இரவு விரியத் துவங்கியிருந்தது. இனி காலை விடிந்ததும்தான் சித்தர்களைத் தரிசிக்க முடியும். மழை அதன் பருவத்திற்கான நியாயத்தை செய்து கொண்டிருந்தது. இரவு முழுதும் ஒவ்வொரு மேகமாக நின்று நிதானமாகப் பொழிந்தபடியிருந்தது. “பூமி நிச்சயம் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். அவளது தாகம் தணிக்க இன்னும் எத்தனை மேகங்களை எத்தனை கடல்களைக் குடித்து மழையாக வேண்டுமோ” என்று குகையின் சுவற்றில் எழுதினேன். உலகம் மாயை என்று பரிகசிக்கும் அனைத்திலும் ஒரு உண்மை ஒளிந்திருக்கும்.

விடிந்து கொண்டிருப்பதை பறவைகள் அறிவித்தன. வானம் நீலம் அருவியிலிருந்து உயிர் பெற்று வந்தவன் போல் அவன் நடந்து வந்தான்.

ஓ மீண்டும் ஆண்!! இம்முறை கந்தர்வனல்ல மாறாக இவன் சித்தன் எனும் அடையாளம் கொண்டிருந்தான். முன்பு சந்தித்தவன் உடல் வனப்பின் வசீகரச் செருக்குக் கொண்டிருந்தான், இவன் ஞானச் செருக்கு கொண்டிருந்தான். ஆண்கள் எளிதில் பெற்றுவிடும் ஒரே உணர்வு தங்களைக் குறித்த ஏதோவொரு வகையிலான செருக்கு. அந்த கந்தர்வனையாவது சிறிது நேரம் கண்ணெடுத்து காண முயன்றேன். என்னை நெருங்கி வந்த சித்தனைக் கண்ட மாத்திரத்தில் முகந்திருப்பிக் கொண்டேன். அவனிடம் எனக்கு வேண்டியதான எதுவுமில்லை முக்கியமாக அவனிடத்தில் இயல்பே இல்லை. அவன் குழம்பினான். அது எனக்குப் பிடித்திருந்தது. அவன் கோபமாக ஏதோ முணுமுணுத்துக் கொண்டே சென்றான். அதைப்பற்றி எனக்கேதும் அக்கறையிருக்கவில்லை.

இலக்குகள் எப்பொழுதுமே சலிப்பைத் தருவன, அவற்றை அடைய மேற்கொள்ளும் பயணங்களே சுவாரசியமானவை என்று மீண்டுமொரு முறை இந்த அனுபவமும் உணர்த்தியது.

மலையின் மறுபக்கத்தின் இறங்கலானேன். அங்குதான் மூன்றாமவன் அமர்ந்திருந்தான். மூங்கில் கூடைகளில் கொய்யாக் கனிகளும், இலைகளை மடித்து அதில் நிலக்கடலைகளையும் நிரப்பி வைத்திருந்தான். அவனிடம் ஏதோ ஒரு வேறுபாடு தெரிந்தது. அவனது செயல்களில் வேகமில்லை. பார்வை ஓரிடத்தில் நிலைபெறவில்லை. அவனால் சொற்களை ஒருங்கிணைத்து பேச முடியவில்லை. அவனை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். என்னைக் கடந்து சென்ற துறவி ஒருவர் சிறுவனாயிருந்த போதே நோயை காரணம் காட்டி அவனை யாரோ இங்கு விட்டுச் சென்றதாகவும், அதன் பின் இதுவரை அவனைத் தேடி யாரும் வந்ததில்லை எனவும் கூறினார். “அவன் இந்த மலையின் குழந்தை” என்றார். யாரிடமும் யாசகம் பெற்று வாழ விரும்பாதவன் எனவும் அதனால்தான் பழங்களையும் நிலக்கடலையும் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தை மடத்தில் ஒப்படைத்து அங்கு வாழ்வதாகவும் கூறினார்.

அவனிடம் பழங்கள் வாங்கிக் கொள்ள முடிவெடுத்தேன். கருணை தான் துளிர்த்தது அவன் மேல். கூடையில் இருந்த பழங்களைக் காட்டி அது வேண்டுமென்றேன். “அம்ருத்” என்று நிதானமாகவும் அழுத்தமாகவும் அவன் கூறிய விதம் என்னை மயக்கியது. கொய்யாக் கனிகளுக்கு அவன் மொழியில் “அம்ருத்” என்று பொருள். அம்ருத் என்றால் அமிர்தம் என்று பொருள். அவன் ஒவ்வொரு பழமாக அணுகி ஆராய்ந்தெடுத்து என்னிடம் கொடுத்தான். மயங்கினேன். கடைசியாக எடுத்த பழத்தை லாவகமாக உடைத்தான். கொய்யாக்கனியின் இளஞ்சிவப்பு ரகசியத்தை அவனும் நானும் ஒரே நேரத்தில் ரசித்து பார்த்தோம். மீண்டும் மயக்கம். நான் கொடுத்த பணத்தை பொறுமையாக எண்ணி மிஞ்சியத் தொகையை என்னிடமே கொடுத்தான். அவன் செய்த ஒவ்வொன்றிலுமிருந்த நிதானமும் நேர்த்தியும் நோயின் குறியீடாக எனக்குத் தோன்றவில்லை. அதுதான் சரியென்று தோன்றியது. வேகவேகமாக வாழும் மனிதர்கள் ஆச்சரியங்களைத் தொலைத்தவர்களாயிருக்கின்றனர். இவன் அப்படியானவனல்ல.

அவன் ஒரு குறிப்பேடு வைத்திருந்தான். அதில் தன்னிடம் பழங்கள் வாங்குபவர்களின் பெயர்களை அவர்களே எழுத வேண்டுமாம். அவர்களின் பெயர்களை குறிப்பிட்டே மடத்திற்கு காணிக்கை செலுத்துவானாம். அந்த குறிப்பேட்டில் என் பெயரை தமிழில் எழுதினேன். எழுத்துகளின் அமைப்பு அவனுக்குப் புரியவில்லை போலும்.” இது என்ன?” என்பது போல் தலையை பொறுமையாக உயர்த்தி கண்களால் கேட்டான். எனது பெயர் என்றேன். அவனால் என் பெயரை உச்சரிக்க முடியவில்லை. “மா”என்று மட்டுமே உச்சரித்தான். மிகவும் முயன்று அவன் உச்சரித்த அந்த தொனி என் செவிகளில் “உமா” என்று கேட்டது.

“உங்க பெயரென்ன? என்றேன். அவன் சொற்களை ஒருங்கிணைக்கத் தீவிரமாக முயற்சித்து தலையை இருபுறமும் அசைத்தவாறு நிதானமாக அழுத்தமாக ஏதோ கூற முயன்றான். அதில் “வா” என்பது மட்டுமே புரிந்தது.

அவனும் நானும் சில மணிநேரங்கள் ஏதேதோ பேசினோம். அவன் பேசவில்லை ஆனால் நான் பேசுவதை கவனமாகக் கேட்டுக் கொண்டான்.

இடையிடையே நிலக்கடலையை உடைத்து ஒவ்வொன்றாக என் உள்ளங்கையில் வைத்தான். எனது உள்ளங்கையின் சதை மேட்டினை அவன் ஒரு குழந்தை போல் அழுத்திப்பார்த்து சிரித்தான். அவனது செயல்களில் ஒரு அசாத்திய நிதானமிருந்தது. நிலக்கடலையை உரித்து வைக்கும் பொழுதெல்லாம் என் உள்ளங்கையை அழுத்தினான். ஒரு நிலையில் நில்லாத அவனது உடலியக்கம் காற்றுக்கு அசைந்தாடும் மலர்க்கொடியின் தன்மையை ஒத்திருந்தது. தூய வெண்ணிற ஆடை அவனது சருமத்தின் கருமைக்கு மேலும் மெருகூட்டியது. தோள் வரை சரிந்திருந்த கேசத்தை அவன் அள்ளி முடிந்திருந்தான். ஒரு மகாமுனியின் சாயல் அதில் தெரிந்தது. அவன் புன்னகைத்தபடியே இருந்தான். அவனோடு இருந்த நேரம் எனக்கு சொல்லொண்ணா நிறைவைத் தந்தது.

அப்பொழுது வானில் மாற்றங்கள் தென்படத் துவங்கின. எங்கிருந்தோ கிளம்பி வந்த இராட்சத மேகங்கள் மலையை சூழ்ந்து கொண்டன. எந்நொடியிலுழ் அவை உடைத்துக் கொண்டு பொழியலாம் என்பது போன்ற வானிலை மனதில் பதற்றத்தைத் தோற்றுவித்தது. நான் அவ்விடம் விட்டு கிளம்பத் தயாரானேன். அவனுக்கு விடைக் கொடுத்தேன். அவனது பழக்கூடைகளை மடத்தின் மறைவிடத்தில் வைக்க உதவினேன். “சரி மீண்டும் சந்திப்போம்” என்று அவனது கைகளைப்பற்றி விடைப் பெற்றேன். அவன் ஏதோ கூற முற்பட்டான். அவனது இருகரம் பற்றி அன்பு வெளிபடுத்திவிட்டு புறப்படத் தயாரானேன். வேகமாக மலையிறங்கத் துவங்கினேன். கனத்த மழை பொழிவின் சப்தம் என்னை அச்சுறுத்தியது. மழை இன்னும் துவங்கியிருக்கவில்லை. அதற்குள் நிலத்தையடைந்து விட்டால் ஏதாவதொரு விடுதியில்அன்றிரவைக் கழித்து விடலாம் என்று பலவாறு யோசித்துக் கொண்டே இறங்கலானேன். காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு குரல் என்னை உ…..மா…என்றழைத்தது. அவன்தான் அழைத்தான். உ….மா…

அவனது குரல் அந்த மலை முழுதும் மோதி எதிரொலித்தது அந்த மணியோசையைப் போலவே. “உ..மா..என்னுடன் வா” என்று சைகையில் அழைத்தான். அந்த குரலின் ஆழம் அவனுக்கு உடன்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்றுணர்த்தியது. வேகமாக ஏறி அவன் நின்ற இடத்தை வந்தடைந்தேன். இப்பொழுது அவன் எனக்கு வழிகாட்டியானான். வேறொரு குறுக்குப் பாதையில் என்னை அழைத்துச் சென்றான். நான் முன்னர் இறங்கிய பாதையில் பாறைகளும் மண்ணுருண்டைகளும் சரிந்து விழுந்து பெரும் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. நான் அழைத்தது அவன் செவிகளை எட்டினாற் போல் தெரியவில்லை. அவனைத் தொடர்ந்து செல்வதொன்றே எனக்கான வழியாக தெரிந்தது. புத்தி பேதலித்தவன் என்று அனைவராலும் அடையாளங் காணப்பட்ட அவன் அப்பொழுது அசாத்திய மாயமொன்றை நிகழ்த்தினான். மேகங்களை பார்த்தான். அவை போகும் திசையை கணித்தான். அதற்கு எதிர் திசையில் என் கைகளைப் பற்றிக் கொண்டு இறங்கினான். அப்பொழுது அவன் முடிந்திருந்த தலைமுடி அவிழ்ந்து கருமேகம் போல் அலைந்தது. கேதுரு மரங்களின் வாசம் அவன் மீதும் வீசியது. மலையும் வனமும் தாய்மடி போல அவனை ஏந்திக்கொண்டு தங்கள் மீது அவன் சுலபமாக விளையாடித் திரிய அனுமதித்தன.

மழை பொழிவின் இரைச்சல் மலை மீது மோதி எதிரொலிக்கத் துவங்கியது. மழையின் சாரல் காற்றில் படர்ந்து வந்து பள்ளத்தாக்கில் நின்றிருந்த எங்கள் மீதும் வீசியது.

நாங்களிருவரும் வெகு தூரம் இறங்கி வந்துவிட்டோம் என்று புரிந்தது. அவன் என் கைகளை தளர்த்தி தன்னிலிருந்து விடுவித்துக் கொண்டான். மழைச்சாரல் நனைத்த அவனது உடுப்பு அவனுடலோடு ஒட்டிக் கொண்டது. நெற்றியில் படர்ந்த கேசத்தில் சாரல் துளிகள் தோரணமிட்டிருந்தன. வேகமாக மலையிறங்கியதால் இருவருக்கும் கடுமையாக மூச்சிரைத்தது. அவனுக்கு சற்று கூடுதலாகவே இரைத்தது. பள்ளத்தாக்கின் குறுக்கே சிறிது தூரம் நடக்கலாம் என்று அவன் அத்திசையைச் சுட்டினான். அவன் காட்டிய திசையில் ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. காற்றில் அதே வாசம், கேதுரு மரக்காடு, மழைக்காளான்கள், கல்லறை மறைவு இப்பொழுது என்னுடன் அவன்.

“அவன் உன்னை அழைத்து வருவான். நீ அவனை அழைத்து வருவாய்”, என்ற குரல் மனதில் கேட்கவே நான் வியப்பில் சுற்றுமுற்றும் பார்த்தேன். கல்லறை மறைவிலிருந்து “உ…மா..” என்ற அவனது குரல் கேட்டது. கேதுரு மரத்தின் மணம் வனத்தை சூழ்ந்தது. மழைக் காளாண்கள் மஞ்சள் சிவப்பு பச்சை நீலமென வானவில் நிறங்களை பிரதிபலித்து ஜொலித்தன. அவன் அழைப்புக்கு செவி மடுக்குமுன் ஒரு முறை அந்த நெடுமரத்தை அணைத்துக் கொண்டேன்.

சமநிலை பிறழாத மனிதர்களை வலிமையானவர்கள் என்று அடையாளப்பபடுத்துவதன் அபத்தத்தை நான் அப்பொழுது உணர்ந்தேன். கீறல் விழுந்த மனங்களில்தான் வெளிச்சம் பாயும். ஏதோவொரு நிகழ்வினால் உண்டாகும் பரவசப் பொழுதில் மனம் அதன் மெய்மையை உணர்கிறது. தனக்கான அழைப்பு எத்திசையிலிருந்து வருகிறது என்பதை மனத்தால் அப்பொழுது துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். நான் சந்தித்த மூன்று ஆண்களையும் உடல், அறிவு, ஆன்மா எனும் கூறுகளின் அழைப்பாகக் கருதிப் பார்த்தால் என் ஈர்ப்பு எதனிடம் இருந்ததென்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

உ…மா….என்ற குரல் முன்பைவிட அழுத்தமாக கேட்டது. கல்லறை மீது பூத்திருந்த பூக்கள் மழையில் குளித்து புத்துயிர் பெற்றிருந்தன. அவனது அழைப்பு தொடர்ந்தது. மழை ஓயும் வரை அது கேட்டது.

மலைப் பயணங்களின் உண்மைகள் தொடரும்..!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.