‘நீ முஸ்லிமா?’ என கேட்டு முதியவர் மீது சரமாரி தாக்குதல் – பரபரப்பு வீடியோ

போபால்:
மத்திய பிரதேசம் நீமச் மாவட்டத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவரை, இளைஞர் ஒருவர் ‘உன் பெயர் முகமது தானே?’ என கேட்டு அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தாக்கப்படும் அந்த முதியவர் இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், இறந்தவர் பெயர் பன்வார்லால் ஜெயின்.  ரத்லம் மாவட்டத்தை சேர்ந்த அவர் கடந்த மே 15-ஆம் தேதி ஒரு மத நிகழ்ச்சிக்காக ராஜஸ்தான் சென்றபோது தொலைந்துவிட்டதாக புகார் வந்தது. இதையடுத்து அவர் புகைப்படத்தை வெளியிட்டு தேடி வந்தோம். இந்நிலையில் நேற்று அவரது உடல் சாலையோரம் கிடந்ததாக கிடைத்த தகவலையடுத்து சென்று விசாரணை நடத்தினோம்.
இதையடுத்து அவர் இருக்கும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் ஜெயின் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். அவரை ஒரு இளைஞர் சராமரியாக தாக்கியபடியே, ‘உன் பெயர் என்ன? முகமது தானே’ என விசாரணை நடத்துகிறார்.  முதியவர் பதில் எதுவும் கூறாமல் இருக்கவே, முதியவரின் கன்னத்தில் அறைந்து, ‘உன் பெயரை ஒழுங்காக சொல், உன் ஆதார் அட்டையை காட்டு’ எனவும் கேட்கின்றனர்.
நடுங்கியபடி இருக்கும் முதியவர் பணம் தருவதாக கூறுகிறார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த தாக்குதல் நடத்துபவர் முதியவரின் காது மற்றும் மண்டையில் சராமரியாக தாக்குகிறார். அவர் பணம் கொடுக்க முயற்சி செய்யும் போது பலமாக தாக்கப்படுகிறார்.
இந்த வீடியோவை ஜெயினின் குடும்பத்தினர் எங்களிடம் கொடுத்தனர்.
இவ்வாறு போலீசார் கூறுகின்றனர்.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தாக்குதல் நடத்தியவர் பெயர் தினேஷ் குஷ்வாஹா என தெரியவந்துள்ளது. மேலும் அவர், முன்னாள் பாஜக கார்ப்பரேட்டரின் கணவர் என்றும் தெரியவந்துள்ளது. அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.