காவல்துறையில் பணியாற்றும் காவலர் ஒருவர் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து ஃபிளக்ஸ் வைத்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சியில் அமர்ந்த பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள முதல் திரைப்படம் என்பதால் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்தியில் வெளியான ஆர்ட்டிக்கிள் 15 திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.
நேற்று நெஞ்சுக்கு நீதி படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே, திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்து தனது மகனின் நடிப்பையும் பாராட்டிவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த படத்திற்கான படக்குழு புரொமோஷனில் தீவிரமாக ஈடுபட்டது. இணைய விளம்பரம், போஸ்டர் என்று அதகளப்படுத்திவரும் நிலையில், மற்றொருபுறம் ஆளும் கட்சியான தி.மு.கவினர் இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கும் வேலையில் தொண்டர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரையிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திரைப்படம் வெளியாகும் முன்பே பல தி.மு.க நிர்வாகிகள் இந்த படத்தின் போஸ்டர்களை தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். அதோடு நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்தி போஸ்டர்களையும் பல இடங்களில் ஒட்டி தங்கள் அரசியல் விசுவாசத்தைத் தலைமைக்கு உணர்த்தியிருந்தனர். பல மாவட்டங்களில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் முதல் நாள் காட்சிகள் முழுவதையும் தங்கள் சொந்தப் பணத்தில் புக் செய்திருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகள் கையில் டிக்கெட்டை கொடுத்து திரைப்படத்தைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க, கட்சிக்காரர்களையே மிஞ்சும் அளவுக்கு பெரம்பலூரில் ஒரு ஃபிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதுவும் பெரம்பலூரைச் சேர்ந்த கதிரவன் என்பவர் காவல்துறையில் ஏ.ஆர் போலீஸ் பணிபுரிந்து வருகிறார். அவர் உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். இதனைப் பார்த்த மற்ற போலீஸார் அன்று இரவே அதனை எடுத்துச்சென்றுவிட்டனர்.
இந்த ஃபிளக்ஸ் போர்டு தான். சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் அந்த படத்தைப் பாராட்டித் தனிப்பட்ட முறையில் வைத்திருந்தால் கூட பிரச்னை இல்லை. அதனால் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை என்று பொத்தம் பொதுவாக வைத்திருப்பது தான் பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது என்று சக போலீஸாரே தலையில் அடித்துக்கொள்கிறார்கள்.
இந்த நிலையில் காவலர் கதிரவன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர. மருத்துவ விடுப்பில் இருக்கும் காவலர் கதிரவன் மீது திறந்தவெளி அழகை சிதைக்கும் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.