பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக முக்கிய இடைத்தரகர்கள் மற்றும் பங்குச் சந்தை வர்த்தகர்களுக்கு சொந்தமான பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
2013-ஆம் ஆண்டு முதல் 2016 -ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணன் பதவி வகித்த போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் அவரது தனிப்பட்ட ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பங்குச் சந்தையின் முக்கிய இடைத்தரகர்கள் மற்றும் வர்த்தகர்கள் தொடர்புடைய இடங்களில் சிபிஐ இன்று அதிரடி சோதனை நடத்தினர். மும்பை, காந்திநகர், டெல்லி, நொய்டா, குருகிராம், கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்களில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் சித்ரா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சிபிஐ இந்த சோதனையை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM